2024 – 25ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டசபையில், இன்று நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் ஆகும்.
முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்தப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாகத் தங்கம் தென்னரசு தெரிவித்தார். சமூக நீதி, கடைக்கோடி தமிழருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம் உள்ளிட்ட 7 இலக்குகளைக் கொண்டது இந்தப் பட்ஜெட் எனத் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், நிதி அமைச்சராக நியமிக்கப்பட்ட தியாகராஜன், 2021 ஆகஸ்ட் 13ல், 2021 – 22ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
அடுத்த ஆண்டு சட்டசபையில், முதல் முறையாகக் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
அடுத்து, 2023 – 24ம் ஆண்டுக்கான பட்ஜெட்டையும் தியாகராஜன் தாக்கல் செய்தார். பட்ஜெட் கூட்டத்தொடருக்கு பின், கடந்த ஆண்டு மே மாதம், அவர் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக மாற்றப்பட்டு, நிதி அமைச்சராகத் தங்கம் தென்னரசு நியமிக்கப்பட்டார்.
நிதி அமைச்சராகப் பொறுப்பேற்ற பின், தன் முதல் பட்ஜெட்டாக, 2024 – 25ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, இன்று காலைச் சட்டசபையில் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.அப்போது அவர் ஆற்றிய உரை: பட்ஜெட் தயாரிப்புக்கு வழிகாட்டிய முதல்வருக்கு நன்றி. இந்தியாவின் 2வது பொருளாதார மாநிலமாகத் தமிழகம் உள்ளது. தமிழக அரசின் நலத்திட்டங்கள் தமிழர்களைத் தலைநிமிரச் செய்துள்ளது. ‘மாபெரும் தமிழ் கனவு’ என்ற தலைப்பில் 7 பகுதிகளாகப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. சமூக நீதி, கடைக்கோடி தமிழருக்கும் நல வாழ்வு, உலகை வெல்லும் இளைய தமிழகம், அறிவுசார் பொருளாதாரம், சமத்துவ நோக்கில் மகளிர் நலம், பசுமை வழிப் பயணம், தாய்த் தமிழும் தமிழர் பண்பாடும் என 7 இலக்குகளில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.
கூட்டாட்சி தத்துவத்தை அடியோடு மறந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு நடந்து கொள்கிறது. தமிழ் இலக்கியங்களை மொழிபெயர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.உலகின் தலைசிறந்து பல்கலை., களில் தமிழ் நூல்கள் இடம்பெறச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மொழித் தொழில்நுட்ப தொழில் நிறுவனங்களுக்கு 5 கோடி ரூபாய் நிதி உதவி.
தரணியெங்கும் தமிழ், மொழிபெயர்க்கப்பட்ட தமிழ் நூல்கள் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்கள் நூலகங்களில் இடம்பெற ஏற்பாடு செய்யப்படும். இதற்காக இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கீடு.
கீழடி உட்பட 8 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ள ஒரு 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு, நாட்டிலேயே அகழாய்வுக்கு அதிக தொகை ஒதுக்கிய மாநிலம் தமிழ்நாடு.
கீழடியில் திறந்தவெளி அரங்கம் அமைக்க 17 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
2030க்குள் குடிசை இல்லாத தமிழ்நாடு உருவாக்கப்படும். 6ஆண்டுகளில் 8 லட்சம்ன்கிரீட் வீடுகள் அமைக்கப்படும் 2024-25 இல் ஒரு லட்சம் வீடுகள் கட்டப்படும். ஒரு வீட்டின் மதிப்பு 3.5 லட்சம் இவ்வாறு அவர் உரையாற்றினார்.
