Trichy Siva’s Kamarajar controversial speech: ஏழைப் பங்காளரைக் குறைகூறத் திமுகவுக்குத் தகுதி இல்லை..!

Video Link :👇

 

கல்விக்கண் திறந்த காமராசர் மீது சாராயக் கடை திறந்த சழக்கர்கள் வசைமாரி பொழிவது இன்றல்ல நேற்றல்ல எழுபதாண்டுகளாகவே தொடர்கிறது. அதுகுறித்துச் சற்று விரிவாகவே பார்ப்போம்.

விடுதலைப் போராட்ட வீரரும், தமிழ்நாட்டு மக்களுக்குத் தொண்டு செய்வதற்காகத் திருமணம் செய்யாமல் வாழ்ந்தவருமான காமராஜர் ஒன்பதாண்டுக்காலம் முதலமைச்சராக இருந்தபோதும் சென்னையில் வாடகை வீட்டில் வாழ்ந்தவர். அந்த வீட்டுக்குத் தன் குடும்பத்தினர் யாரையும் அவர் வரவழைத்ததில்லை, வரவிடவும் இல்லை. காமராஜர் நாட்டு விடுதலைக்குப் பின் 1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலில் திருவில்லிப்புத்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
சென்னை மாகாணத்தில் குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவந்த ராஜாஜிக்கு எதிர்ப்பு வந்ததால் 1954ஆம் ஆண்டு அவர் முதலமைச்சர் பதவியிலிருந்து விலகினார்.

ஏப்ரல் 13 தமிழ்ப்புத்தாண்டு நாளில் காமராஜர் முதலமைச்சராகப் பதவியேற்றார். இதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகி அப்போது காலியாக இருந்த குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலில்  போட்டியிட்டு வெற்றிபெற்றார். தான் போட்டியிடுவதற்காக அவர் எவரையும் பதவி விலகவும் சொல்லவில்லை, தன் சாதி மக்கள் பெரும்பான்மையாக உள்ள தென்மாவட்டங்களில் உள்ள தொகுதியையும் தேர்வு செய்யவில்லை. 1957, 1962 ஆகிய இரு சட்டமன்றத் தேர்தல்களிலும் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். கோட்டையில் முதலமைச்சராக இருந்தார். மூத்தோர்கள் அரசுப் பதவிகளை விட்டுவிட்டுக் கட்சிப் பணியாற்ற வேண்டும் என்ற திட்டத்தின்படி 1963ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாள் முதலமைச்சர் பதவியிலிருந்து காமராஜர் விலகினார்.
அதன்பின் 1967ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டுத் திமுக வேட்பாளரிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் நாகர்கோவில் மக்களவை உறுப்பினர் நேசமணி காலமானதால் அந்தத் தொகுதி காலியானது. அதில் 1969ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினர் ஆனார். மீண்டும் 1971ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நாகர்கோவில் மக்களவை உறுப்பினரானார். 1975ஆம் ஆண்டு அக்டோபர் இரண்டாம் நாளில் அவர் இறக்கும்போதும் அந்தப் பதவியில் இருந்தார்.
மக்களுக்குத் தொண்டாற்றத் திருமணம் செய்யாமலே இருந்தவர். ஒன்பதாண்டுகள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோதும், இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக மூன்றாண்டுகள் இருந்தபோதும் சென்னையில் வாடகை வீட்டில் வாழ்ந்தவர் காமராஜர். தன் வீட்டார் யாரையும் சென்னையில் உள்ள தன் வாடகை வீட்டுக்கு வர வைக்காதவர். அப்பேர்ப்பட்டவர் ஏசி போடாமல் உறங்க மாட்டார் என்று கருணாநிதி தன்னிடம் சொன்னதாகத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கூறியுள்ளார். பெருந்தலைவர் ஏழைப்பங்காளர் இறந்தபின் ஐம்பதாண்டுகள் கழித்தும் திமுகவுக்கு அவர் மீதிருக்கும் காழ்ப்புணர்ச்சியை திருச்சி சிவாவின் பேச்சு காட்டுகிறது. இது பெருந்தலைவரின் புகழைக் கெடுக்க அவர் வாழ்ந்த காலத்தில் திமுக என்னென்னவெல்லாம் செய்திருக்கும் என்பதற்கு ஒருபானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் போன்றதுதான்.
சுவிஸ் வங்கியில் பணம்போட்டு வைத்துள்ளார், தன் சாதிக்காரர்களைக் கள்ளநோட்டு அடித்துக்கொள்ள விட்டுள்ளார் என்றெல்லாம் அவர் மீது திமுக சுமத்திய பழியெல்லாம் கொஞ்சநஞ்சமல்ல. சுவிஸ் வங்கியில் கணக்கிருந்தால் அந்தக் காசோலையைக் கொண்டு வாருங்கள் கையொப்பமிட்டுத் தருகிறேன் என்று எளிமையாக, பொறுமையாகக் கூறித் திமுகவின் பொய்ப் பரப்புரையை அடக்கிய பச்சைத் தமிழர் காமராஜர். சாத்தூர் அணை கட்டியதில் மீதமிருந்த பணத்துக்கு அங்கே ஒரு பூங்காவை அமைக்கச் சொன்னவர். கூட்டுறவு நூற்பாலைகளுக்கு ஜப்பானில் எந்திரங்கள் வாங்கியதில் கிடைப்பதாக இருந்த தரகுத் தொகையில் இன்னொரு நூற்பாலை கட்டச் சொன்னவர் என்றெல்லாம் அந்தத் தலைவனின் புகழ் தமிழ்நாடெங்கும் மணக்கும்.
இருப்பினும் அண்டங்காக்கை, கருவாட்டுக்காரி மகன், சுவிஸ் வங்கியில் பணம்போட்டுள்ளவர் என்றெல்லாம் அவர் மீது கருணாநிதி சுமத்திய பழிகள் கொஞ்சநஞ்சமல்ல. நாகர்கோவிலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவில்லை, நாடார்மன்றத் தேர்தல் நடைபெறுகிறது என்று நாடார்களுக்கு எதிரான தனது வெறுப்பை உமிழ்ந்தார் கருணாநிதி. அணைகளையும் பாலங்களையும் கட்டுவதற்கு ஒதுக்கிய நிதியில் பெருந்தொகையைத் தரகாகப் பெற்றுக்கொண்டதால் அந்த அணையும் பாலமும் சாய்ந்த உடைந்த வரலாற்றைக் கொண்ட திமுகவில் உள்ளவர்கள் காமராஜர் மீது குற்றஞ்சாட்டுவதைத் தமிழ்நாட்டின் எந்தத் தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.
1975 அக்டோபர் இரண்டாம் நாளில் அவர் இறந்தபோது இரண்டுசோடி வேட்டி சட்டைகள், புத்தகங்கள், சட்டைப்பையில் இருநூறு ரூபாய்ப் பணம் இவ்வளவுதான் இருந்ததாகக் கூறுகின்றனர். அப்பேர்ப்பட்ட அப்பழுக்கற்ற தலைவர் காமராஜர் தன் மறைவுக்கு முன்பு கருணாநிதியின் கைகளைப் பற்றிக் கொண்டு ஜனநாயகத்தைக் காக்க வேண்டுமென்று கேட்டதாகத் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா புளுகியுள்ளார். மின் வெட்டைக் கண்டித்தும் திமுக அரசின் அவலத்தை எதிர்த்தும் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய காமராஜர் ஏசி இல்லாமல் இருக்கமாட்டார் என்றும் அவருடைய தங்கும் விடுதி உட்பட அனைத்து இடங்களிலும் குளிர்சாதன வசதி செய்தவர் கருணாநிதி என்றும் திருச்சி சிவா புளுகியுள்ளார்.

அத்துடன் நில்லாமல் நெருக்கடி நிலைக் காலத்தில் காமராஜரைக் கைது செய்யக் கங்கணம் கட்டிக் கொண்டிருந்த இந்திரா காந்தியிடமிருந்து திமுக அரசு தான் அவரைக் காத்தது என்றும் பேசியுள்ளார். பொய்யையே பேசி ஆட்சியைப் பிடித்துச் சாராயக் கடை திறந்து மது மயக்கத்தில் மக்களைத் திளைக்க வைத்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ள திமுகவில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள திருச்சி சிவாவின் இந்தப் பேச்சைக் கேட்டுப் பலர் எதிர்வினை ஆற்றியுள்ளனர்.காங்கிரசைச் சேர்ந்த கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தனது எதிர்வினையில் திமுகவினர் பரப்பிய கட்டுக்கதைகளால்தான் காமராஜர் வீழ்த்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். திமுகவினரின் கட்டுக்கதைகளுக்குச் சரியான பதிலடி தராமல் இருந்தால் காமராஜரின் ஆன்மா நம்மை மன்னிக்காது என்றும் கூறியுள்ளார். காமராஜர் பெயரால் தமிழக அரசியல் களத்தில் காங்கிரஸ் இன்றும் நிற்பதாக ஜோதி மணி குறிப்பிட்டுள்ளார்.

ஏசி அறை இல்லாமல் காமராஜர் உறங்கமாட்டாரெனத் திருச்சி சிவா சொல்வது உண்மைக்குப் புறம்பானது என்று குறிப்பிட்டுள்ள ஜோதிமணி, வெளியூர் சென்றால் அரசினர் விடுதியில் தங்கும் காமராஜர் வெயில் காலத்தில் புழுக்கம் அதிகமாக இருந்தால் அங்குள்ள மத்தடியில் படுத்து உறங்கியவர் என்றும் கூறித் திருச்சி சிவாவுக்கும் கட்டுக்கதை கட்டுவதில் வல்லவரான திமுகவினருக்கும் சரியான பதிலடி கொடுத்துள்ளார்.தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள கண்டனச் செய்தியில், மறைந்த தலைவர்களைக் கொச்சைப்படுத்திப் பேசுவது, அவர்களது மேன்மையை இழிவுபடுத்திப் பேசுவது திமுகவிற்குப் புதிதில்லை என்றும். குறிப்பாகக் கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசுவது திமுகவினரின் வழித் தோன்றல்களுக்குப் புதிதில்லை. என்றும் தெரிவித்துள்ளார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா காமராஜரைக் குறைத்துப் பேசியிருப்பது, அதுவும் வரலாற்றுத் திரிபைச் செய்திருப்பது வருந்தத்தக்கது என்பதை விட வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஏழை எளிய மக்களின் வாழ்வு மேம்பட உழைத்த ஒப்பற்ற மனிதரான காமராஜர் சுகவாழ்வு வாழ்ந்தார் என்பது போல உள்நோக்கம் கொண்டு திருச்சி சிவா பேசியிருப்பது உண்மையிலேயே பேரதிர்ச்சியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் வெள்ளையர்களை எதிர்த்துச் சிறை சென்ற காமராஜரை இந்திரா காந்தியிடமிருந்து காத்தோமெனத் திமுக சொல்வதெல்லாம் நகைப்புக்குரியது என்று நாகேந்திரன் கூறியுள்ளார்.
காமராஜரை அன்று இந்திரா காந்தி கைது செய்திருந்தால் தமிழகமே வெகுண்டெழுந்திருக்கும், இன்று அதை வைத்து அவரை இழிவு செய்யும் திமுகவிற்கு எதிராகவும் வெகுண்டெழும் என்று நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். இந்திரா காந்தியின் எதேச்சதிகாரத்தை எதிர்த்து;த தான் காங்கிரஸ் அன்று உடைந்ததையும், அப்போது காமராஜரை எதிர்த்துக் கொண்டு இந்திரா காந்தியோடு கூட்டணி வைத்தது இதே கருணாநிதி தலைமையிலான திமுகதான் என்பதையும் நாகேந்திரன் சுட்டிக் காட்டியுள்ளார்.காமராஜரின் புகழும் அரசியலும் அழிய வேண்டுமென்று பணி செய்தது திமுகதான் என்றும், அவர்களுடைய ஆழ் மனத்தின் வன்மம் எப்போதும் காமராஜரைப் பதம் பார்த்துக் கொண்டேதான் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சட்டமன்றத்திலேயே காமராஜரின் அருஞ்செயலைக் கருணாநிதி மீது ஏற்றித் துரைமுருகன் கூறியதையும், காமராஜருக்கே கல்லறை கட்டினோம் என்று ஆலந்தூர் ஆர்எஸ் பாரதி கூறியதையும் நாகேந்திரன் சுட்டிக் காட்டியுள்ளார். அதே வரிசையில் திருச்சி சிவா அவதூறை அள்ளித் தெளித்துள்ளதாக நாகேந்திரன் கூறியுள்ளார். உண்மை என்னவென்றால், தன்னுடைய ஒப்பற்ற தலைவர்களில் ஒருவரான காமராஜர் மீது காங்கிரஸ் கட்சியே தீராக் காழ்ப்பில்தான் உள்ளதாகவும். அதனால்தான் திமுக காமராஜரைக் கொச்சைப்படுத்தும் போதெல்லாம், பெயருக்குக் கூட ஒரு கண்டனம் தெரிவிக்காமல், உள்ளூர ரசித்தபடியே கூட்டணியில் தொடர்வதாகவும் நாகேந்திரன் கூறியுள்ளார்.
கர்மவீரர் காமராஜரைக் கொச்சைப்படுத்திப் பேசியதற்கு திருச்சி சிவா வெளிப்படையாக மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.கடந்த 65 ஆண்டுகளாகச் சாராயக் கடைகளைத் திறந்து மக்களை மயக்கத்தில் ஆழ்த்தி, மாநிலத்தின் வளங்களைக் கொள்ளையடிக்கும் திமுகவினருக்கு, தமிழ்நாடெங்கும் பள்ளிக் கூடங்கள் திறந்து கல்வி வெள்ளம் பாயச் செய்த அப்பழுக்கற்ற காமராஜரைக் குற்றஞ்சாட்டவும் குறைகூறவும் எந்த அருகதையும் இல்லை என்பதை இந்த நாடறியும் உலகறியும்.
பெரியதாகவும் சிறியதாகவும் தெருவுக்கொரு வீடு வைத்துக்கொண்டிருக்கும் திமுகவினருக்கு, ஒன்பதாண்டுக்காலம் முதலமைச்சராக இருந்தபோதும் சென்னையில் வாடகை வீட்டில் வாழ்ந்த காமராஜரைப் பற்றிக் குறைகூற எந்தத் தகுதியும் இல்லை என்பதை இந்த மாநிலத்தோர் அறிவர்.
பள்ளிகள் திறந்து கல்வி வெள்ளம் பாயச் செய்தவர் காமராஜர்.
அணைகள் கட்டிக் கால்வாய் வெட்டி வெள்ளம் பாயச் செய்தவர் காமராஜர்.
ஆலைகள் கட்டித் தொழில்வளம் பெருகச் செய்தவர் காமராஜர்.
அரசியல் வானில் ஞாயிறாக விளங்கும் அவர் புகழைச் சின்னஞ்சிறு வௌவால்களெல்லாம் தன் அழுக்கு இறக்கைகளால் ஒருபோதும் மறைத்துவிட முடியாது என்பதே உண்மை..
சிறப்பு செய்தியாளர் – சே. பச்சைமால்கண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *