“தலையா கடல் அலையா” எனத் திரண்ட பக்தர்கள் கூட்டம் – திருச்செந்தூர் சூரசம்ஹாரம் கோலாகலம்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்தசஷ்டிப் பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹார உற்சவம் இன்று மிகுந்த கோலாகலத்துடனும் பக்திப் பரவசத்துடனும் நடைபெற்றது. இந்தத் தெய்வீக நிகழ்வைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் திரண்டு முருகப்பெருமானைத் தரிசித்தனர்.
திருச்செந்தூர் திருத்தலத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழா தனித்துவம் மிக்கதாகும். ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டி திதியில், முருகப்பெருமான் சூரபத்மனை வதம் செய்து ஆட்கொண்ட புண்ணிய பூமி திருச்செந்தூர் என்பதால், இங்கு நடைபெறும் கந்தசஷ்டி மற்றும் சூரசம்ஹார நிகழ்வுகள் உலகப் புகழ்பெற்றவை.
இவ்வாண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 10-ஆம் தேதி யாகசாலை பூஜைகளுடன் கோலாகலமாகத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து 5 நாட்களும் அதிகாலை யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விழா நாட்களில் தினமும் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி மற்றும் தெய்வானை அம்பாளுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர், திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் சுவாமிக்கும் அம்பாள்களுக்கும் மஞ்சள் பொடி, மாப்பொடி, இளநீர், தேன், பால், தயிர், பன்னீர், விபூதி மற்றும் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மங்கல திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன.
விழாவின் 6-ஆம் நாளான இன்று அதிகாலை 1 மணிக்கே திருக்கோவில் நடை திறக்கப்பட்டது. அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம் மற்றும் தீபாராதனையும் சிறப்பாக நடந்தேறின. யாகசாலையில் நடைபெற்ற தீபாராதனைக்குப் பின்னர், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானை சமேதரராகத் தங்கச் சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்திற்கு எழுந்தருள, அங்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து கந்தசஷ்டி மண்டபத்தில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
மாலை வேளையில், சூரபத்மன் தனது பரிவாரங்களுடன் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து திருச்செந்தூர் கடற்கரையை அடைந்தான். மறுபுறம், அன்னை பராசக்தியிடம் பெற்ற சக்திவேலுடன், வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு போர்க்கோலம் பூண்ட சுவாமி ஜெயந்திநாதர், சூரனை வதம் செய்வதற்காகக் கடற்கரையில் எழுந்தருளினார். சுவாமியைக் கண்டதும் கடற்கரையில் குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்களும், சஷ்டி விரதமிருந்த அடியார்களும் ‘வெற்றிவேல், வீரவேல்’ என விண்ணதிர முழக்கமிட்டு வணங்கினர்.
இதனைத் தொடர்ந்து ஆசுர சக்திகளுக்கும் தெய்வீக சக்திக்கும் இடையிலான போர் தொடங்கியது. முதலில், மாயையின் வடிவமான யானை முகம் கொண்ட தாரகாசுரன் தனது படைகளுடன் முருகப்பெருமானை எதிர்த்துப் போருக்கு அறைகூவல் விடுத்தான். சுவாமியை இடமிருந்து வலமாகச் சுற்றி வந்து எதிரே நின்று போக்கு காட்டிய தாரகாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார். அடுத்ததாக, கன்மத்தின் உருவமான சிங்கமுகாசுரன் முருகனைச் சுற்றி வந்து நேருக்கு நேர் போரிட முயன்றான்; அவனையும் முருகப்பெருமான் சம்ஹாரம் செய்தார்.
தன் சகோதரர்கள் வீழ்ந்ததைத் தொடர்ந்து, ஆணவத்தின் மொத்த உருவமான சூரபத்மன் தன் படைகளுடன் ஆக்ரோஷமாகப் போருக்கு வந்தான். இறுதிவரை அடிபணிய மறுத்த சூரபத்மன், பல வடிவங்களை எடுத்துப் போரிட்டுத் தோல்வியடைந்த நிலையில், இறுதியாகப் பிரம்மாண்டமான மாமரமாக உருமாறி நின்றான். உடனே முருகப்பெருமான், அன்னை வழங்கிய சக்திவேலை ஏவி மாமரத்தை இரு கூறாகப் பிளந்து சூரனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டார். சக்திவேலின் அருளால் இரண்டாகப் பிளந்த மாமரத்தின் ஒரு பகுதியைத் தனது வாகனமான மயிலாகவும், மற்றொரு பகுதியைத் தனது சேவற்கொடியாகவும் மாற்றி முருகப்பெருமான் ஏற்றுக்கொண்டார்.
சூரசம்ஹாரம் நிகழ்ந்த அந்தத் தருணத்தில், கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா” என்று பக்திப் பரவசத்துடன் முழக்கமிட்டனர். சம்ஹாரம் முடிந்ததும், பக்தர்கள் கடலில் புனித நீராடி, பின்னர் கோவிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தமிழகத்தின் மூலை முடுக்கிலிருந்தும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்திருந்தனர். ‘கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள் தலையா, கடல் அலையா’ என வியக்கும் வண்ணம் எங்கு நோக்கினும் பக்தர்களின் தலைகளாகவே காட்சியளித்தது. கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் சூரசம்ஹார நிகழ்வைத் தெளிவாகக் காண்பதற்காகக் கோவில் வளாகம் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் பிரம்மாண்ட எல்.இ.டி (LED) திரைகள் அமைக்கப்பட்டிருந்தன.
பக்தர்களின் வசதிக்காகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்புப் பேருந்துகளும், திருச்செந்தூர் – திருநெல்வேலி வழித்தடத்தில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படுகின்றன. பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் தலைமையில் 4,000-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிரப் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், பக்தர்கள் கடலில் நீராடும்போது ஆழமான பகுதிக்குச் செல்வதைத் தடுக்கத் தடுப்பு மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, தீயணைப்பு வீரர்களும் போலீசாரும் படகுகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கந்தசஷ்டி விழாவின் அடுத்த முக்கிய நிகழ்வாக, நாளை இரவு ராஜகோபுரம் அருகே உள்ள மண்டபத்தில் சுவாமி குமரவிடங்க பெருமான் – தெய்வானை அம்பாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *