நாட்டின் முன்னேற்றத்துக்குப் பழங்குடியினர் பெரும் பங்காற்றியுள்ளனர் – பிரதமர் மோடி பெருமிதம்!

நாட்டின் முன்னேற்றத்துக்குப் பழங்குடியினர் பெரும் பங்காற்றியுள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

விடுதலை வீரர் பிர்சா முண்டா பிறந்த நாள் தேசியப்  பழங்குடியினர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி மகாராஷ்டிரத்தின் கட்சிரோலியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலியில் பங்கேற்று மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முடிவுற்ற திட்டங்களைத் தொடக்கி வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் விடுதலைக்காகப் போராடிய பழங்குடியின நாயகர்களைப் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்தார். 2014ஆம் ஆண்டு தான் ஆட்சிக்கு வரும்போது நாட்டின் 124 மாவட்டங்கள் நக்சலிசம், மாவோயிசம் ஆகியவற்றின் பிடியில் இருந்ததாகவும், இப்போது அவையனைத்தும் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஒரு காலத்தில் மக்கள் செல்வதற்கு அஞ்சிய சத்தீஸ்கரின் பஸ்தாரில் தான் பாதுகாப்புப் படையினருடன் தீபாவளியைக் கொண்டாடியதாகத் தெரிவித்தார். தீபாவளிக்குத் தீபங்கள் மட்டும் ஒளிரவில்லை என்றும், மக்களின் முகத்தில் நம்பிக்கையின் ஒளியும் ஒளிர்வதாகவும் தெரிவித்தார்.

இந்த நாட்டின் முன்னேற்றத்துக்குப் பழங்குடியினரின் பங்களிப்பை நினைவுகூர்ந்த பிரதமர், நாட்டுக்கே பழங்குடியினப் பெண்மணி திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக உள்ளதாகப் பெருமிதம் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *