யாராக இருந்தாலும், எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், ஒரு சிறிய ஆசையினால் தவறு செய்துவிட்டால், அவர்கள் வாழ்நாளில் சேர்த்து வைத்த பெயரும் புகழும் அழிந்துவிடும். அதோடு, வழக்குகளுக்காக நீதிமன்றப் படிகளையே ஏறி இறங்கும் நிலை ஏற்படும் என்று தேனி மாவட்ட நீதிபதி இரஜினி எச்சரித்துள்ளார்.
சர்வதேச உலக அமைதி தினத்தை முன்னிட்டு, தேனியில் உள்ள தனியார் விடுதியில் “உலக அமைதி குழு” மற்றும் “மனிதநேய காப்பகம்” சார்பில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி இரஜினி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ஆசிரியர்கள் மற்றும் சமூக சேவகர்கள் என 200க்கும் மேற்பட்டோருக்கு விருதுகளை வழங்கிப் பேசினார்.
சமூக வளர்ச்சிக்கு அமைதியான மற்றும் பாதுகாப்பான சூழல் மிகவும் அவசியமானது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் நாம் வீட்டின் வாசலைக் கடந்து செல்வது கூட ஒரு போராட்டமாகவே உள்ளது. மற்றவர்களை விடத் தான் அதிகப் பணக்காரனாக வேண்டும் என்று ஒப்பீடு செய்யத் தொடங்கும் போதுதான், மனிதர்களிடம் குறுகிய மனப்பான்மை உருவாகிறது.
கோபப்படுவது, பொறாமை கொள்வது, மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்ப்பது போன்றவை நமது நிதானத்தை இழக்கச் செய்து, பல்வேறு குற்றச் செயல்களுக்கு வழிவகுத்துவிடும். வாழ்க்கை முன்னேற்றத்திற்கு மன அமைதி மிக முக்கியம். அமைதியான மனநிலையில்தான் தெளிவான முடிவுகளை எடுக்க முடியும்.
இன்றைய சூழலில் செய்தித்தாள்களைத் திறந்தாலே போக்சோ வழக்குகள் குறித்த செய்திகள்தான் அதிகமாக வருகின்றன. தவறான எண்ணங்களுக்கும் ஆசைகளுக்கும் இடம் கொடுத்து ஒரு தவறைச் செய்துவிட்டால், அது அவரையும் அவரது குடும்பத்தையும் பாதிப்பதோடு, சேர்த்து வைத்த நற்பெயரையும் முற்றிலுமாக அழித்துவிடும்.
எனவே, தெளிவான சிந்தனையோடும் அமைதியோடும் வாழப் பழகிக் கொண்டால், இந்த உலகமே நமக்கு ஒரு பூந்தோட்டமாகத் தெரியும்.
இவ்வாறு நீதிபதி இரஜினி பேசினார்…



