Test cricket :வரலாற்றில் முதல்முறை… பாகிஸ்தானை வீழ்த்தி வங்காளதேசம் அபாரம்!

Advertisements

பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் வங்காளதேசம் அபார வெற்றி பெற்றது.

ராவல்பிண்டி:பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 448 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. சாத் ஷகீல் (141 ரன்), முகமது ரிஸ்வான் (171 ரன்) சதம் அடித்தனர்.

இதைத்தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய வங்காளதேச அணி 167.3 ஓவர்களில் 565 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக முஷ்பிகுர் ரஹிம் 191 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் நசீம் ஷா 3 விக்கெட்டும், ஷகீன் ஷா அப்ரிடி, குர்ரம் ஷஜாத், முகமது அலி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

117 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 23 ரன்கள் அடித்திருந்தது. அப்துல்லா ஷபிக் 12 ரன்களுடனும், கேப்டன் ஷான் மசூத் 9 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்நிலையில் இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தின் சிறபான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் முகமது ரிஸ்வான் மட்டும் பொறுப்புடன் விளையாடி அணியை இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார்.

முடிவில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சில் 146 ரன்களில் சுருண்டது. இதன் மூலம் வங்காளதேசம் வெற்றி பெற வெறும் 30 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக ரிஸ்வான் 51 ரன்கள் அடித்தார். வங்காளதேசம் தரப்பில் மெஹிதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளும், ஷகிப் அல் ஹசன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இதனையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேசம் விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் அடித்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் வங்காளதேசம் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்காளதேசம் வெற்றி பெறுவது இதுவே முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *