
தமிழக அரசு நவம்பர் 1, 2 ஆகிய நாட்களில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என அறிவித்து விளம்பரம் வெளியிட்டுள்ள நிலையில், அதை வேறு நாட்களில் நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்தவ மக்கள் அனைவரும் வழிபடும் கல்லறைத் திருநாள் அன்று தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்தவப் பெருமக்கள் மறைந்த தங்கள் உறவினர்கள் மற்றும் முன்னோர்களைக் கல்லறையில் வழிபடுவர் என்பதால், அவர்களால் தேர்வுக்குச் செல்ல இயலாது என்றும் பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 1, 2 ஆகிய நாட்களில் நடத்தத் திட்டமிட்டுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வை வேறொரு உகந்த தேதிக்கு மாற்றி அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.


