
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழாவின் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோசம் முழங்கச் சூரனை முருகன் வதம் செய்தார்.
ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13 ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கோலாகலமாகத் துவங்கியது. இந்நிலையில், சூரசம்ஹாரம் நிகழ்வையொட்டி, இன்று அதிகாலை 1:00 மணிக்குக் கோயில் நடை திறக்கப்பட்டது. 1:30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து வள்ளி, தெய்வானை அம்பாளுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் வெள்ளி சப்பரத்தில் எழுந்தருளிக் கந்தசஷ்டி மண்டபம் வந்தடைந்தனர். பின்னர் சுவாமி ஜெயந்திநாதருக்கு திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து மாலை 4:00 மணியளவில் கடற்கரையில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சுவாமி ஜெயந்திநாதர் முதலில் யானை முகம் கொண்ட தாரகா சூரனையும், இரண்டாவதாகச் சிங்கமுகம் கொண்ட சூரபத்மனை வேலால் வதம் செய்தார். பின்னர் தன் சுய முகம் கொண்ட சூரபத்மனை தனது வெற்றி வேலால் வதம் செய்தார். தொடர்ந்து மாமரமாகவும், சேவலாகவும் வந்து சூரபத்மனை வேலால் வதம் செய்து சேவலை தனது கொடியாகவும், மாமரத்தை மயிலாகவும் மாற்றிச் சுவாமி ஜெயந்திநாதர் ஆட்கொண்டார்.

இந்தச் சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக் காண்பதற்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்கள் மற்றும் சிங்கப்பூர் மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடியிருந்து சூரசம்ஹாரம் நிகழ்ச்சியைக் கண்டு பரவசமடைந்தனர். சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்காகக் காவல்துறை சார்பில் 2 காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உட்பட 3000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.இதேபோலப் பழனி, திருத்தணி, மருதமலை, மயிலம், வெள்ளிமலை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை தரிசனம் செய்தனர்.

