Srinagar encounter:ஜம்முவில் தீவிரவாத தாக்குதல் – என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொலை!

Advertisements

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருவேறு இடங்களில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளன. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அதேநேரம், 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று மட்டுமே இரண்டு தீவிரவாத சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடாவில் நேற்று இரவு ராணுவ தளம்மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.

தற்போது வரை இந்தச் சண்டை நீட்டித்து வருகிறது. சத்தர்கலா பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் கூட்டுப்படை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 வீரர்கள் மற்றும் ஒரு சிறப்பு அதிகாரி உட்பட 6 பேர் காயமடைந்தனர்.

அதேபோல், ஜம்முவின் கதுவா பகுதியில் தாக்குதல் நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். ஜம்மு அருகே உள்ள கதுவாவில் தீவிரவாதிகள் இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், பொதுமக்களுக்குக் காயம் ஏற்பட்டது. பின்னர் நேற்றிரவு தீவிரவிதிகள் இருவரையும் பாதுகாப்பு படை தேடி தாக்குதல் நடத்தியது.

பாதுகாப்பு படையினரின் என்கவுன்டரில் இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தற்போது கதுவாவின் ஹிராநகர் பகுதியில் பதுங்கியுள்ள இரண்டாவது தீவிரவாதியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. ஆளில்லா விமானம்மூலம் தேடும் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்முவின் தற்போது நடைபெற்றுள்ள இரண்டு தீவிரவாத தாக்குதல்களும் தீவிரவாத பாதிப்புகள் ஏற்படாத பகுதி என்று பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. தீவிரவாதிகள் மக்களின் வீடுகளில் தண்ணீர் கேட்டுள்ளனர். இது கிராம மக்களுக்குச் சந்தேகத்தை எழுப்ப, அவர்கள் பாதுகாப்பு படைக்குத் தகவல் தெரிவிக்க துப்பாக்கிச் சூடு சண்டை நடந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜூன் 09 மாலை 6 மணியளவில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரியாஸி மாவட்டத்தில் உள்ள ரான்ஸூ என்ற பகுதியில் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்றின் மீது தீவிரவாதிகள் சிலர் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்தார்.

இதனைத் தொடர்ந்து பேருந்து அருகில் இருந்த ஒரு பெரிய பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த குழந்தை உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *