
மேற்காசியாவில் நிலவும் போரையும், கெடுபிடியையும் நிறுத்தி, மண்டலத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்துவதற்கு பிரிக்ஸ் அமைப்பு குறிப்பிடத் தக்க பங்காற்ற வேண்டும் என்று ஈரான் அதிபர் மசூது பெசஸ்கியான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஈரான் அதிபர் மசூது பெசஸ்கியான் நேற்றுத் தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, மேற்காசியாவில் நிலவும் போரையும், கெடுபிடியையும் நிறுத்தி, மண்டலத்தில் அமைதியையும் நிலைத்தன்மையையும் ஏற்படுத்த வேண்டிய தேவையை வலியுறுத்தியுள்ளார்.
பிரிக்ஸ் அமைப்பின் தலைவராக இந்தியா உள்ளதால், மேற்காசியாவில் பதற்றத்தைத் தணிப்பதற்கு உறுப்பு நாடுகளிடம் பேசிக் குறிப்பிடத் தக்க பங்காற்றச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதேபோல் மேற்காசியாவின் இப்போதைய நிலைமை, இராணுவத் தாக்குதல், அதில் தங்கள் நாட்டின் நிலைப்பாடு ஆகியவற்றைப் பிரதமர் மோடியிடம் ஈரான் அதிபர் விளக்கியுள்ளார்.
இப்போதுள்ள கெடுபிடியைத் தளர்த்துவதன் இன்றியமையாமை, பதற்றத்தைத் தணிக்க வேண்டிய தேவை ஆகியவற்றையும் அவர் எடுத்துரைத்துள்ளார். அதேபோல் மினாப் என்னுமிடத்தில் பள்ளியின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 168 குழந்தைகள் உயிரிழந்ததையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



