தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து அமித் ஷா, பியூஷ் கோயல் ஆகியோருடன் பேசியதாகவும், தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு சென்னையில் நடைபெறும் என்றும் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக, அதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அமமுக பொதுச்செயலாளர் தினகரனும் தில்லிக்குச் சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினர்.
கூட்டணித் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுக்காக அவர்கள் தில்லிக்குச் சென்றதாகவும், ஜெயலலிதா காலத்தில் தேசியக் கட்சிகள் தமிழ்நாட்டில் வந்து தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசும் நிலை இருந்ததாகவும் திமுக தலைவர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் தில்லியில் இருந்து சென்னைக்குத் திரும்பிய தினகரன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழ்நாடு பாஜகவுக்கான பொறுப்பாளர் பியூஷ் கோயல் ஆகியோரைத் தான் சந்தித்ததாகத் தெரிவித்தார். அனைத்துத் தொகுதிகளிலும் எப்படிச் செயல்படுவது என்பது குறித்து விவாதித்ததாகக் கூறினார்.
ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட்டால் மகாராஷ்டிரம், அரியானா, பீகார் மாநிலங்களில் பெற்றதைப் போல் தமிழ்நாட்டிலும் மாபெரும் வெற்றியைப் பெற முடியும் என்று தெரிவித்தார்.
தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு சென்னையில் நடைபெறும் என்றும், இன்னும் இரண்டு மூன்று நாட்களில் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சு நடத்தி எந்தெந்தக் கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் என்று அறிவிக்கப்பட உள்ளதாகக் கூறினார்.
தொகுதிப் பங்கீட்டைச் சுமூகமாக முடித்து மக்களின் ஆதரவுடன், திமுகவை ஆட்சியை விட்டு விரட்டுவோம் என்று தினகரன் தெரிவித்தார்.


