Siddaramaiah: எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.50 கோடி ‘குதிரை பேரம்’ : கர்நாடகாவில் ஆட்சியை கவிழ்க்க சதி; சித்தராமையா குற்றச்சாட்டு!

Advertisements

பெங்களூரு: எம்எல்ஏக்களுக்கு தலா 50 கோடி ரூபாய் கொடுத்து “குதிரை பேர”த்தின் மூலம் கர்நாடகா காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடப்பதாக, முதலமைச்சர் சித்தராமையா குற்றம் சாட்டியிருக்கிறார்.

அவருடைய இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் போது காங்கிரஸ் வெற்றி பெற்று சித்தராமய்யா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வருகிற 19ஆம் தேதி தொடங்கி, இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. கர்நாடக மாநிலத்தில் ஏப்ரல் 26 மற்றும் மே 7 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணியுடன் பாஜக ஒரு அணியாகவும் காங்கிரஸ் தனி அணியாகவும் போட்டியிடுவதால் அங்கு நேரடி போட்டி நடைபெறுகிறது.

தேர்தலில் வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாத அளவிற்கு பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கர்நாடக காங்கிரஸ் ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்து வருவதாக பகீர் குற்றச்சாட்டை முதல்வர் சித்த ராமையா கூறியிருக்கிறார்.

“குதிரை பேரத்தின் மூலமாக காங்கிரஸ் எம்எல்ஏக்களை தலா 50 கோடி ரூபாய் கொடுத்து ஆட்சியைக் கவிழ்க்க தொடக்கத்தில் இருந்தே பாஜக சதி செய்து வருவதாகவும்”, “ஆனால் ஒவ்வொரு கட்டத்திலும் இந்த சதி முறியடிக்கப்பட்டு வருவதாகவும்” அவர் கூறியிருக்கிறார்.

” தாமரை நடவடிக்கை” (ஆபரேஷன் லோட்டஸ்) என்ற பெயரில் மீண்டும் நடைபெற்ற இந்த சதி வலையில் தங்கள் எம்எல்ஏக்கள் நிச்சயம் சிக்க மாட்டார்கள். ஒரு எம்எல்ஏவைக் கூட அவர்களால் விலைக்கு வாங்க முடியாது 5 ஆண்டு காலம் முழுமையாக ஆட்சியை நிறைவு செய்வோம்” என்று சித்தராமையா நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.

முதல்வரின் இந்த குற்றச்சாட்டுக்கு பாஜக தரப்பில் உடனடியாக பதிலடி கொடுக்கப்பட்டது. இது பற்றி கருத்து தெரிவித்த பாஜக தலைவர்கள் “இது துரதிஷ்டவசமான குற்றச்சாட்டு. இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் சொல்லி மக்களிடமிருந்து அனுதாப ஓட்டுகளை பெற அவர் முயற்சிக்கிறார்.

மக்கள் பிரச்சினைகளில் முதலில் முதலமைச்சர் கவனம் செலுத்த வேண்டும். புதிய திட்டங்களை கொண்டு வருவதில் ஆர்வம் காட்ட வேண்டும். பாஜக மீது இது போன்ற பொய்யான அவதூறுகளை வாரி இறைக்க வேண்டாம். மக்களவைத் தேர்தலில் மாநிலத்தில் உள்ள 28 தொகுதிகளை கைப்பற்றுவதில் ஆர்வம் செலுத்துவதை விட தேர்தலுக்குப் பின்னர் தன்னுடைய அரசியல் இருப்பு பறி போய் விடக்கூடாது என்பதில் தான் முதல்வர் சித்தராமையா கவனம் செலுத்தி வருகிறார்” என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *