Sexual complaint:புயலை கிளப்பிய ஹேமா கமிட்டி அறிக்கை.. சிக்கலில் நடிகர்கள்!

Advertisements

மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கமிட்டியின் அறிக்கையை கேரள அரசு கடந்த வாரம் வெளியிட்டது. அதில், நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும், இதில் மாபியா கும்பல் தலையீடு இருப்பதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் அடுத்தடுத்து அம்பலத்திற்கு வந்தவண்ணம் உள்ளன. நடிகர் சங்கத்தில் உள்ள சிலர் மீதும் புகார் எழுந்ததால் நடிகர் சங்க தலைவர் மோகன்லால் உள்பட நிர்வாகிகள் பதவி விலகினர். தொடர்ந்து புகார் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான எம்.எல்.ஏ. முகேஷ் ராஜினாமா செய்ய வேண்டும் என சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் வி.டி.சதீசன் வலியுறுத்தி உள்ளார்.

‘எம்.எல்.ஏ. முகேஷ் மீது தொடர்ந்து வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. எனவே நடவடிக்கை எடுக்கவேண்டியது மாநிலத்தை ஆட்சி செய்யும் மார்க்சிஸ்ட் கட்சியின் கடமை. முகேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இடது ஜனநாயக முன்னணியின் (LDF) கூட்டணி கட்சிகள், எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இந்த கோரிக்கை எழுந்துள்ளது. பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள தங்கள் எம்.எல்.ஏ.வை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாத்து வருவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது’ என்றும் சதீசன் தெரிவித்தார்.

நீதிபதி ஹேமா கமிட்டியின் அறிக்கை தொடர்பாக கேரள அரசு சரியான நேரத்தில் செயல்படவில்லை என்று முன்னாள் மத்திய மந்திரியும் பா.ஜ.க. தலைவருமான முரளீதரன் விமர்சித்துள்ளார்.

கொல்கத்தா மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு, நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டம் நடைபெற்றபோதிலும், பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு இந்த விஷயத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. உட்பட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை பாதுகாக்க முயற்சிக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.

ஹேமா கமிட்டி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றவாளிகளின் பெயர்களை வெளியிட வேண்டும் என்று திரையுலகில் உள்ள தொழில்நுட்ப வல்லுனர்களின் தொழிற்சங்கமான கேரள திரைப்பட ஊழியர் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சட்ட ஆதரவு மற்றும் உளவியல் ஆதரவை வழங்க உள்ளதாகவும் உறுதி அளித்துள்ளது.

எம்.எல்.ஏ. முகேஷை கைது செய்ய எர்ணாகுளம் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

நடிகரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.வுமான முகேஷ் மீது நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில், முகேஷ் மீது மராடு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *