
தமிழ்நாட்டில் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு இருந்தது.இதனையடுத்து, கோடை வெயில் காரணமாக, தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகி இருந்தன.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், முதலமைச்சர் உடன் இதுகுறித்து ஆலோசனை நடத்தி உரிய அறிவிப்பு வெளியாகும் என தெரிவித்தார்.
மழை காரணமாக கோடை வெப்பம் தணிந்த நிலையில், பள்ளி திறப்பில் மாற்றம் இல்லை என்றும், வரும் ஜூன் 2-ம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என்றும், பள்ளிகளை திறப்பதற்கு தயாராக வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதனிடையே தமிழ்நாடு அரசு பாடநூல்கழகத்தின் மூலம் சென்னை, ஒடிசா, ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் அச்சடிக்கப்பட்ட இலவச பாடப்புத்தகங்கள் தமிழக மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டு வருகின்றன.



