
நெல்லை மாவட்டம் திசையன்விளை பஜாரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் வண்டி வண்டியாய் வந்து இறங்கிய நிவாரண பொருட்களை வாங்க போட்டா போட்டி போட்டுக்கொண்டு குவிந்த மக்களால் திசையன்விளை பஜாரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தென் மாவட்டங்களில் கடந்த வாரங்களில் பெய்த கனமழை காரணமாக நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. மழை வெள்ளம் சூழ்ந்து வீட்டுக்குள் புகுந்த வெள்ள நீரால் பல மக்கள் பொருட்களை இழந்து, தங்குவதற்கு இடம் என்று நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தற்போது வெள்ளநீர் வடிய தொடங்கியுள்ள நிலையில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்ட மக்கள் தங்களது வீடுகளுக்குச் செல்லத் தொடங்கிவிட்டனர்.
அவ்வாறு செல்லும் மக்களுக்கு நெல்லை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ் ஆர் ஜெகதீஷ் ஏற்பாட்டில் திசையன்விளை அனைத்து வியாபார பெருமக்கள் இணைந்து 15க்கு மேற்பட்ட வண்டிகளில் வெள்ள நிவாரண பொருட்களைக் கொண்டு வந்து வழங்கி உள்ளனர். பாதிக்கப்பட்டுள்ள மக்களைக் கண்டறிந்து அவர்களுக்கு முன்னதாகவே டோக்கன் வழங்கப்பட்டிருந்தது. எனினும் நிவாரண பொருட்களை வாங்க மக்கள் கூட்டம் முண்டியடித்துக் கொண்டு அலைமோதியது.
இதனால் திசையன்விளை பஜாரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனர். 15க்கும் மேற்பட்ட வண்டிகளில் கொண்டுவரப்பட்டுள்ள நிவாரண பொருட்கள் நெல்லை மாவட்ட ஊராட்சியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி எஸ் ஆர் ஜெகதீஸ் தலைமையில் உள்ள குழுவினர் நேரில் சென்று வழங்க உள்ளனர். நிவாரண பொருட்களைப் பெற்ற மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்துடன் மளிகை பொருட்களைத் தலையில் சுமந்து செல்கின்றர்.


