Ravinder chandrasekar:திரைப்பட தயாரிப்பாளர் வீட்டு கதவைத் தட்டிய அமலாக்கத்துறை!

Advertisements

சென்னை அசோக் நகரில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராகப் பிரபலமானதைக் காட்டிலும் சோசியல் மீடியா மூலம் அதிகம் பிரபலம் ஆனவர் ரவீந்தர் சந்திரசேகர். இவர் கவின் நடித்த லிஃப்ட் உள்ளிட்ட சில படங்களைத் தன்னுடைய லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம்மூலம் தயாரித்துள்ளார். இவருக்குக் கடந்த 2022-ம் ஆண்டு சீரியல் நடிகை மகாலட்சுமி உடன் திருமணம் ஆனது. இருவருக்குமே இது இரண்டாவது திருமணம் ஆகும். திருமணத்துக்குப் பின் இவரைப் பற்றி விமர்சனங்களும் அதிகளவில் வந்தன.

கடந்தாண்டு மோசடி வழக்கில் சிக்கிய ரவீந்தர், கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலம் சிறை தண்டனையும் அனுபவித்தார். கழிவுகளைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதாகக் கூறி சென்னை சேர்ந்த பாலாஜி என்பவரிடமிருந்து ரூ.16 கோடி வாங்கிவிட்டு ரவீந்தர் ஏமாற்றிவிட்டதாக அவர்மீது சென்னை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

சுமார் ஒரு மாத சிறை தண்டனைக்குப் பின்னர் நிபந்தனை ஜாமின் பெற்ற ரவீந்தர், விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் ரவீந்தரின் வங்கிக் கணக்கிலிருந்து பணப்பரிவர்த்தனை நடந்திருப்பது பற்றி விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று காலைச் சென்னை அசோக் நகரில் உள்ள ரவீந்தர் சந்திரசேகரின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோத பண பரிவர்த்தனை புகார் தொடர்பாக அவர்கள் சோதனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ரவீந்தர் சந்திரசேகர் வீட்டில் நடக்கும் இந்தத் திடீர் சோதனையால் கோலிவுட்டில் பரபரப்பு நிலவி வருகிறது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *