
கடந்த 17 ஆம் தேதி பாராளுமன்ற கூட்டத்தொடரின்போது மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்… அம்பேத்கர்… அம்பேத்கர்’ என முழக்கமிடுவது இப்போது FASHION ஆகிவிட்டது. இதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்திருந்தால், சொர்க்கத்திலாவது அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசினார்.
இந்தக் கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து பாராளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கர் புகைப்படங்களை ஏந்தி அமித்ஷாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாராளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதனால் அவை நடவடிக்கைகள் நேற்று முழுவதும் முடங்கின.
பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமித் ஷா, பா.ஜ.க. ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது.
* அம்பேத்கரின் கொள்கைகளைப் பா.ஜ.க. பின்பற்றி வருகிறது. நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கருத்துக்களை திரித்துக் கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது. AI மூலம் எனது பேச்சைக் காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மாநிலங்களவையில் பாபாசாகேப் அம்பேத்கர் குறித்து பேசியதற்காக உள்துறை அமைச்சர் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே இந்தியா கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
மேலும் அமைச்சர் பதவியை அமித் ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி இன்று நாடாளுமன்றத்தின் ‘மகர் த்வார்’ கேட் வழியாக இந்தியா கூட்டணி கட்சியினர் பேரணியாகச் சென்றனர்.
இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி நீல நிற டீ-ஷர்ட் அணிந்திருந்தார். வழக்கமாக வெள்ளை நிறத்திலான டீ-ஷர்ட் அணியும் ராகுல் இம்முறை அம்பேத்கரை குறிக்கும் விதமாக நீல நிற டீ-ஷர்ட் அணிந்து பாராளுமன்றத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
அதே போல் வயநாடு எம்.பி. பிரியங்கா காந்தி நீலநிற துண்டு அணிந்து நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்துள்ளார்.


