
புதுச்சேரி திருவாண்டார் கோவிலில் ஏரிக்கரை பகுதிகளில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்குக் கஞ்சா பொட்டலங்களை விற்பனை செய்ய முயன்ற 3 மூன்று பேரைப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் கஞ்சா விற்பனை படு வேகமாக நடைபெற்று வருகின்றது. போலீசார் இரும்புக்கரம் கொண்டு தடுத்த போதிலும் கஞ்சா விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. புதுச்சேரி மேற்கு பிரிவு எஸ்.பி.வம்சிதரெட்டி உத்தரவின் பேரில் கஞ்சா விற்பனை நடமாட்டத்தை தடை செய்யக் கிராமப்புற காவல் நிலைய அதிகாரிகள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று திருபுவனை இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரண்யா மற்றும் போலீசார் மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில் பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது திருவாண்டார் கோவில் ஏரிக்கரை பகுதியில் கஞ்சா பொட்டலங்களை வைத்து விற்பனை செய்து கொண்டிருந்த 3 பேரை வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அதில் விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியத்தில் உள்ள பள்ளித்தென்னல் பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் 25, அருள் 24, ஆகியோரும் திண்டிவனம் பகுதியைச் சேர்ந்த முகமது 34, ஆகியோர் 1 கிலோ கஞ்சாவை பொட்டலங்களாகப் பிரித்து விற்பனை செய்தது போலீசாருக்கு தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை பரிமுதல் செய்து குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திக் காலாப்பட்டு ஜெயிலில் அடைத்தனர். இந்தக் கஞ்சா விற்பனைகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருகின்றது.

