திருப்பூர் மாவட்டத்தில் வெட்டிக்கொல்லப்பட்ட காவல் உதவி ஆய்வாளரின் குடும்பத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒருகோடி ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மகேந்திரன். இவருக்கு உடுமலை அருகே குடிமங்கலம் மூங்கில் தொழுவில் தென்னந்தோப்பு உள்ளது. இந்தத் தோட்டத்தில் மூர்த்தி என்பவர் தங்கி அதைப் பராமரித்து வருகிறார். மூர்த்திக்கும் அவர் மகன் தங்கப்பாண்டியனுக்கும் தகராறு ஏற்பட்டதாகப் பக்கத்துத் தோட்டத்தினர் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
இதையடுத்துக் குடிமங்கலம் காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் அங்குச் சென்றுள்ளார். அப்போது குடிவெறியில் இருந்த தந்தையும் மகனும் சேர்ந்து சண்முகவேலை அரிவாளால் வெட்டிக்கொன்றுவிட்டுத் தப்பிச் சென்றனர்.
அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையே காவல் உதவி ஆய்வாளர் கொலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கொடூரச் செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
உதவி ஆய்வாளர் சண்முகவேலின் குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் நிவாரண நிதியாக வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

