சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
பாமக தலைவர் அன்புமணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சேலம், ஜாகிர் அம்மாபாளையம் பகுதியில் 92 ஏக்கர் பரப்பளவில் குப்பை எரிஉலை அமைத்து குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். குப்பை எரிக்கப்படுவதிலிருந்து டையாக்சின், சல்பர் டையாக்சைடு, கார்பன் மோனாக்சைடு, உள்ளிட்டவை வெளியாகி, மனித உடலுக்குள் சென்ற பின்னரும் கூட அழியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு ஆபத்தானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த நச்சு ரசாயனங்களால் புற்றுநோய், இருதய நோய்கள், மூச்சுக்குழல் நோய்கள், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். சேலம் உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் குப்பை எரிஉலைகளை அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளார். கழிவுகளை 4 வகைகளாகப் பிரித்து மத்திய அரசின் 2026 ஆம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.


