
பிரதமர் மோடி தலைமையிலாண மத்திய அரசு, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்களின் மீது தலா 2 ரூபாய் கலால் வரியை உயர்த்தியுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு, நாட்டின் எரிபொருள் சந்தையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.மத்திய அரசின் இந்த திடீர் அறிவிப்பு பலரையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்ஜெட்டில் நிதி பற்றாக்குறை அதிகமாக இருப்பது பெரும் சுமையாக பார்க்கப்பட்ட நிலையில், மத்திய அரசு எரிபொருள் மீதான வரியை உயர்த்தியுள்ளது.
கடந்த ஒரு மாதத்தில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், இன்று 85.53 ரூபாயில் இருந்து 85.86 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. WTI கச்சா எண்ணெய்-யின் ஜூன் கான்டிராக்ட் விலை ஒரு பேரலுக்கு இம்மாத துவக்கத்தில் 63 டாலருக்கும் அதிகமாக இருந்தது, ஆனால் இன்று 60 டாலராக குறைந்துள்ளது. இதேவேளையில் டிரம்ப் அரசின் வரி விதிப்பின் தாக்கமாக தற்போது இந்தியா இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் விலை உயரும் காரணத்தால் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி உயர்த்தப்பட்டு இருக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்த வரி உயர்வு மூலம் ஏற்படும் வரி உயர்வை மக்கள் தலையில் விழுமா என்பது சந்தேகமாக இருக்கும் வேளையில், தற்போதைய தகவல் படி இந்த கலால் வரி உயர்வை எண்ணெய் நிறுவனங்களே ஏற்றுக்கொண்டு ரீடைல் விலையில் எவ்விதமான மாற்றமும் செய்யாமல் தற்போதை விலையிலேயே தொடர்ந்து பெட்ரோல், டீசல் விற்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. சர்வதேச சந்தையில் 2021 ஏப்ரல்-க்கு பின்பு WTI 59.77 டாலர், பிரெண்ட் கச்சா எண்ணெய் 63.35 டாலர் அளவில் குறைந்துள்ளது. இதுவே இந்தியாவில் பார்த்தால் மே 22, 2022 முதல் எவ்விதமான மாற்றமும் இல்லாமல் இருந்த பெட்ரோல், டீசல் விலை நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு மார்ச் 14ஆம் தேதி கடைசியாக குறைக்கப்பட்டது.



