
தான் வாய் திறந்தால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறக்குத்தான் செல்ல வேண்டும் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக முன்னாள் ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
முன்னாள் முதல்வரும், முன்னாள் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தொண்டர்கள் உரிமைமீட்பு ஆலோசனைக் கூட்டம் கோவை, திருச்சி சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், கு.ப.கிருஷ்ணன், புகழேந்தி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஓ பன்னீர்செல்வம் பேசுகையில், எடப்பாடி பழனிச்சாமியின் அதிகாரபோதையால் தான் அதிமுக கடந்த கால தேர்தல்களில் தோற்றது. அதிமுக தொண்டர்களால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம். எங்கள் பக்கம் தொண்டர்கள் இருக்கின்றனர். எடப்பாடி பழனிசாமி பக்கம் குண்டர்கள் மட்டுமே இருக்கிறார்கள். உண்மையான அதிமுகவை மீட்டெடுப்பதற்காக மட்டுமே நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
தனிக்கட்சி தொடங்கப் போவதில்லை. எடப்பாடி பழனிசாமியிடமிருந்து அதிமுகவை மீட்டெடுக்க போவதாகவும், எந்தக் காலத்திலும் தனிக்கட்சி ஆரம்பிக்கப் போவதில்லை என்றும், வருகின்ற நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு அமைப்பாகத் தான் அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு பாதுகாப்பு குழு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும் 2 முறை பதவியை அம்மா என்னிடம் கொடுத்தார். நான் அவரிடமே கொடுத்துவிட்டேன். 3வது முறை சின்னமாவிடம் கொடுத்தேன். என்னை யாரும் துரோகியெனக் கூற முடியாது. சில விஷயங்களை அரசாங்க ரகசியம் என்பதால் அமைதியாக விட்டுவிட்டேன். முதல்வராக என் கையெழுத்து இல்லாமல் ஒரு கோப்பும் சென்றது கிடையாது.
தான் வாய் திறந்தால் எடப்பாடி பழனிச்சாமி திகார் சிறக்குத்தான் செல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.அதிமுகவின் சரித்திரத்தில் 12 ஆண்டுகள் கழகத்தின் பொருளாளராக இருந்தவன் நான் என்பதை பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன். அந்தப் பொறுப்பை என்னிடம் அம்மா தரும்போது 2 கோடி ரூபாய் பற்றாக்குறை இருந்தது. இரண்டே வருடத்தில் அது 4 கோடியாக ஆயிற்று.
அம்மா அவர்கள் ஒருநாள் என்னை அழைத்து, பன்னீர்செல்வம் தனிப்பட்ட முறையில் எனக்கு நிதி பற்றாக்குறை இருக்கிறது. வழக்குகள் எல்லாம் என்மேல் போட்டு இருக்கார்கள். நான் அவர்களுக்கு எல்லாம் வங்கிகள்மூலம் பணம் தர வேண்டும். 2கோடி ரூபாய் கழக நிதி எனக்குத் தரக் கேட்டார். உடனே நான் ஒரு வருடத்தில் திருப்பித் தந்துவிடுகிறேன் என்றார்.
உடனே 2 கோடி ரூபாய் கொடுத்தேன். ஒரே மாதத்தில் அம்மாவும் அந்த 2 கோடி ரூபாய் கொடுத்தார். இதுதான் வரலாறு.இன்றைக்கு எங்களை எல்லாம் வெளியேற்றி விட்டு வன்முறை மூலமாக 228 பேரைக் கூட்டி பொதுக்குழுவை கூட்டியிருக்கிறார்கள். இந்த 228 பேரை வைத்துக் கழகத்தை அபகரிப்பு செய்து மீண்டும் நாலரை வருடம் முதலமைச்சராக இருந்த ருசி அவரை விடவில்லை.
திரும்ப வந்து நாட்டையே சூறையாடி கொள்ளையடித்து செல்ல வேண்டும் என்பது தான் அந்தக் கூட்டம் இன்றைக்கும் பொதுக்குழுவை நடத்திக் கொண்டு இருக்கிறது என்பதுதான் நிதர்சமான உண்மையெனக் கூறினர்.



