
குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கான்வே தெரிவித்துள்ளார்.
வெலிங்டன்:நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் மத்திய சம்பள ஒப்பந்த பட்டியலிலிருந்து முன்னணி வீரர்கள் விலகுவது வாடிக்கையாகி உள்ளது. ஏற்கனவே வில்லியம்சன், டிரெண்ட் பவுல்ட், லாக்கி பெர்குசன் போன்ற முன்னணி வீரர்கள் ஒப்பந்த பட்டியலிலிருந்து விலகிச் சாதாரண வீரராக விளையாட உள்ளதாக அறிவித்தனர்.
அந்த வரிசையில் தற்போது பின் ஆலன் மற்றும் டெவான் கான்வே மத்திய சம்பள ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிச் சாதாரண வீரர்களாக விளையாட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
குறிப்பாகத் தமது குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவதற்காகவும் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கான்வே தெரிவித்துள்ளார். அதே சமயம் தாம் விரும்பும் தொடர்களில் தொடர்ந்து நியூசிலாந்துக்காக விளையாடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு:- “முதலில் இந்தச் செயல்பாடுக்கு அனுமதியளித்த நியூசிலாந்து கிரிக்கெட்டுக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மத்திய ஒப்பந்தத்திலிருந்து விலகுவது நான் எடுத்த இலகுவான முடிவல்ல. ஆனால் இந்த நேரத்தில் எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இதுவே சிறந்தது என்று நான் நம்புகிறேன். இப்போதும் நியூசிலாந்துக்காக விளையாடுவது என்னுடைய உச்சமாக இருக்கிறது.
நியூசிலாந்தை பிரதிநிதித்துவப்படுத்துவதிலும் சர்வதேச போட்டிகளில் வெற்றி பெறுவதிலும் நான் ஆர்வத்துடன் இருக்கிறேன். அதனால் அடுத்ததாக வரும் டெஸ்ட் தொடர்களில் நான் விளையாட உள்ளேன். பாகிஸ்தானில் நடைபெறும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் தேர்வானால் விளையாடத் தயாராக உள்ளேன்” என்று கூறினார்.

