சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிநவீன வசதிகளுடன் கூடிய புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை அமைப்பதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைத் தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க செயின்ட் ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் பல ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தலைமைச் செயலகத்தில் நிலவிவரும் இடநெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில் இந்த புதிய வளாகம் அமைக்கப்படவுள்ளது. இதற்காக மயிலாப்பூர் வட்டத்திற்கு உட்பட்ட பட்டினப்பாக்கம் பகுதியில் சுமார் 25.55 ஏக்கர் நிலப்பரப்பு இதற்காக முழுமையாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் வருவாய்த் துறைக்குச் சொந்தமான நிலங்களை ஒருங்கிணைத்து இந்த பிரம்மாண்ட திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
சுமார் 20 லட்சம் சதுர அடி கட்டடப் பரப்பளவில், ஏறத்தாழ 1,200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஒருங்கிணைந்த நவீன தலைமைச் செயலகம் கட்டப்படவுள்ளது. உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்பு வசதிகள், இலகுவான மக்கள் அணுகல் முறை மற்றும் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இக்கட்டடம் வடிவமைக்கப்பட உள்ளது. இப்பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) மற்றும் மதிப்பீடுகளை உரிய காலக்கெடுவுக்குள் சமர்ப்பிக்குமாறு பொதுப்பணித்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
திட்டத்தை துரிதப்படுத்த 3 தனிக்குழுக்கள் அமைப்பு: இப்பெரும் கட்டுமானப் பணிகளை எந்தவிதத் தாமதமும் இன்றித் தடையின்றிச் செயல்படுத்தும் பொருட்டு, தமிழக அரசு கீழ்க்கண்ட மூன்று தனித்தனி உயர்நிலைக் குழுக்களை அமைத்துள்ளது:
சர்வதேச அளவில் புகழ்பெற்ற கட்டடக்கலை மற்றும் பொறியியல் ஆலோசனை நிறுவனங்களை ‘ஆர்வம் காட்டுதல்’ (EoI) அடிப்படையில் தேர்வு செய்யும் குழு.
கட்டடத்தின் ஆரம்பகட்ட வரைபடங்கள், சூழல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வடிவமைப்புகளை ஆய்வு செய்து மதிப்பீடு செய்யும் குழு.
கட்டுமானப் பணிகளுக்கான இறுதிக்கட்ட வரைபடங்கள், மதிப்பீடுகள் மற்றும் அனைத்துத் துறை ஒப்புதல்களுக்கும் இறுதி வடிவம் தரும் குழு.
இந்த புதிய தலைமைச் செயலகம் அமைவதன் மூலம், அரசு நிர்வாகப் பணிகள் ஒரே கூரையின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு, பொதுமக்களுக்குச் சேவைகள் வழங்குவது மேலும் துரிதப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


