Namakkal:கள்ளத்தொடர்பு விவகாரத்தில் இளம்பெண் எரித்துக்கொலை?

Advertisements

மணிமேகலைக்கு வாலிபருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

நாமக்கல்:நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ளது பட்டணம் பெரிய ஏரி. அந்த ஏரி தற்போது சீமைக்கருவேல மரங்கள் மற்றும் முட்புதர்கள் நிறைந்து காணப்படுகிறது. இதனால் ஏரியில் உள்ள பகுதியில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும்.

இந்த நிலையில் நேற்று இந்த ஏரியில் சுமார் 25 வயது மதிக்கத் தக்க இளம்பெண் ஒருவரின் பிணம் எரிந்த நிலையில் கிடந்தது. இதை அந்த வழியாக ஆடு மேய்க்க சென்ற ஒருவரின் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அதைத்தொடர்ந்து ராசிபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது இறந்த பெண் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எனத் தெரியவில்லை. ஆனால் உடலில் காயங்களுடன் எரிந்த நிலையில் கிடந்ததால், அந்தப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். மேலும் பெண்ணின் உடலை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில், இறந்து கிடந்த பெண், ராசிபுரம் காக்காவேரியை சேர்ந்த பரமேஷ், தனக்கொடி தம்பதியின் மகள் மணிமேகலை (29) என்பதும், சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பொன்னாரம்பட்டி பறவைகாட்டை சேர்ந்த கூலி தொழிலாளி ரமேஷ் என்பவரின் 2-வது மனைவி என்பதும் தெரியவந்தது. மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், முதல் கணவரைப் பிரிந்த மணிமேகலை, கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு ரமேஷை 2-வது திருமணம் செய்துள்ளார். பின்னர் அவர் தனது குழந்தைகள் நிஷா (8), பவ்யாவுடன் (5) பட்டணம் அடுத்த வடுகம்முனியப்பம்பாளையம் ஊராட்சி, குச்சிக்காட்டில் வசித்து வந்துள்ளார். அதனால் பொன்னாரம்பட்டியில் முதல் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் ரமேஷ், அவ்வப்போது குச்சிக்காட்டிற்கு வந்து மணிமேகலையை பார்த்துச் சென்றுள்ளார்.

ஆனால் குச்சிக்காட்டை சேர்ந்த மற்றொரு வாலிபருடன், மணிமேகலைக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி செல்போனில் பேசியதை அறிந்த ரமேஷ் அவர்களைக் கண்டித்தார். இதுகுறித்து ரமேஷின் புகாரின் பேரில், மணிமேகலையுடன் கள்ளத்தொடர்பில் இருந்த வாலிபரை நாமகிரிப்பேட்டை போலீசார் எச்சரித்து அனுப்பி உள்ளனர்.

கடந்த மாதம் 15-ந் தேதி குழந்தைகளை விட்டுவிட்டு மணிமேகலை மாயமானதாகத் தெரிகிறது. இந்த நிலையில் அவரது உடல் பட்டணம் பெரிய ஏரியில் எரித்துக்கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டு உள்ளது. அவரது உடல் எரிக்கப்பட்டு உள்ளதால், பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மணிமேகலையுடன் தொடர்பில் இருந்த வாலிபரைப் பிடித்து விசாரணை நடத்த உள்ளோம். விசாரணை முழுமையாக முடிவடைந்த பின்னரே கொலைக்கான முழு விவரம் தெரியவரும். இவ்வாறு போலீசார் கூறினர்.

இளம்பெண் ஒருவர் எரித்துப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *