
புதுடில்லி: ”இன்று இரவு பிரதமர் மோடியை சந்திக்கும் போது. மத்திய அரசு மழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்பேன் ” என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
டில்லியில் முதல்வர் ஸ்டாலின் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் மக்கள் காப்பாற்றப்பட்டார்கள். வெள்ளம் நிவாரணமாக ரூ. 5 ஆயிரம் கோடி கேட்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்கிடம் வலியுறுத்தினேன். மத்திய அரசு, பேரிடர் நிதியில் இருந்து ரூ.450 கோடியை வழங்கியுள்ளது. மிக்ஜாம் புயல், தென் மாவட்ட மழை என அடுத்தடுத்து இரு பேரிடர்களை தமிழகம் சந்தித்துள்ளது.
புயலுக்கு முன்பு, பின்பும் அரசு எடுத்த நடவடிக்கையால் பாதிப்பு குறைந்தது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பை தாண்டி அதிகளவில் மழை பெய்துள்ளது. தமிழக அரசின் நடவடிக்கையால் மழை பாதிப்பு குறைந்துள்ளது. மிக்ஜாம் புயலின் போது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகளை மத்திய அரசு பாராட்டி உள்ளது.
தென் மாவட்டங்களில் வானிலை மையத்தின் கணிப்பை தாண்டி அதிகனமழை பெய்துள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை தாமதமாக தான் கிடைத்தது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் காயல்பட்டினத்தில் 94 செமீ மழை பெய்துள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் மழை வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலிக்கு நாளை செல்ல உள்ளேன். இன்று இரவு பிரதமர் மோடி சந்திக்க நேரம் கொடுத்துள்ளார். பிரதமரை இரவு சந்தித்து மனு கொடுத்து விட்டு, மழை பாதிப்பு நிலவரம் குறித்து வலியுறுத்துவேன்.
மத்திய அரசு மழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என பிரதமரிடம் கேட்பேன். நிவாரணம் கிடைக்கும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். ஏற்கனவே மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கிடம் மழைப்பாதிப்புகள் குறித்து வலியுறுத்தியுள்ளேன். நிவாரணம் கேட்டு பிரதமர் மோடி, நிதியமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.
மத்திய அரசின் நிதி வரட்டும் என காத்திருக்காமல் 4 மாவட்ட மக்களுக்கான இழப்பீட்டை அரசு அறிவித்தது. மத்திய அரசின் நிதியை முழுமையாக பெற்றால்தான் முழுமையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும். மத்திய அரசின் குழுவினர் 4 மாவட்டங்களில் ஆய்வு செய்தனர். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

