மராட்டிய நிலச்சரிவில் பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்த ஏக்நாத் ஷிண்டே!

Advertisements

மராட்டிய நிலச்சரிவில் பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து அவர்களது பாதுகாவலராக செயல்படுவேன் என மராட்டிய முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.

புனே:மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மராட்டியத்தின் ராய்காட் மாவட்டத்தில் இர்ஷல்வாடி கிராமத்தில் கனமழையை தொடர்ந்து பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி உயிரிழந்த 22 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மோப்ப நாய் குழுவினர் இன்று வரவழைக்கப்பட்டனர்.நிலச்சரிவு இடிபாடுகளில் எவரேனும் சிக்கியிருக்கிறார்களா? என கண்டறியும் பணி நடந்து வருகிறது.

தேசிய பேரிடர் மீட்பு படையினரும் தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த சூழலில், மராட்டியத்தின் யவத்மல் பகுதியில் காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், வீடுகள் மற்றும் கட்டிடங்கள் உள்பட நகரின் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து காணப்படுகிறது. சாலை முழுவதும் வாகன போக்குவரத்து முடங்கி உள்ளது. கார்கள், இரு சக்கர வாகனங்கள் நடுவழியில் வெள்ளத்தில் சிக்கி நின்று விட்டன. வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் இருப்பவர்களை மீட்கும் பணியும் நடந்து வருகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை அந்த பகுதியில் பாதிக்கப்பட்டு உள்ளது. நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு நேரில் சென்ற மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே நிவாரண மற்றும் மீட்பு முயற்சிகளை பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

அவர் சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் உதவி தொகை வழங்கப்படும் என அறிவிப்பும் வெளியிட்டார். இந்த நிலையில், ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி வெளியிட்டு உள்ள செய்தியில், இர்ஷல்வாடி நிலச்சரிவு சம்பவத்தில் பல்வேறு குழந்தைகள் தங்களது பெற்றோர்கள் இருவரையும் இழந்து உள்ளனர். இந்த குழந்தைகளை தத்தெடுத்து, அவர்களது பாதுகாவலராக செயல்படுவேன் என மராட்டிய முதல்-மந்திரி ஷிண்டே அறிவித்து உள்ளார். அநாதைகளான 2 வயது முதல் 14 வயது வரையிலான குழந்தைகளை ஸ்ரீகாந்த் ஷிண்டே அறக்கட்டளை கவனித்து கொள்ளும் என அறிவித்து உள்ளது. ஷிண்டேவின் மகனான ஸ்ரீகாந்த் ஷிண்டேவால் நடத்தப்படும் அறக்கட்டளை வழியே அவர்களுக்கான அனைத்து கல்வி மற்றும் பிற விசயங்களுக்கான செலவுகள் செய்யப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *