Madurai High Court:7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்கக் கூடாது?

7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்கக் கூடாது? என மதுரை ஐகோர்ட்டு கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரை:ராமநாதபுரத்தைச் சேர்ந்த பூபேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ராமநாதபுரம் மாவட்ட நகர்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி இல்லை என்பதால் அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள் என்றும், ராமநாதபுரம் மாவட்ட நகர்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்க நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, ராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒரு அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 2 அரசு உதவி பெறும் இருபாலர் மேல்நிலைப்பள்ளிகள், அரசுப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகியவை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர் தரப்பில், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கே மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கே மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்தச் சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து தாலுகாக்கள் அல்லது மாவட்ட தலைநகரங்களிலாவது அரசுப் பள்ளிகளை அமைக்க வேண்டும்” எனத் தெரிவித்தனர்.

இல்லையெனில் மருத்துவ படிப்புக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் ஏன் வழங்கக் கூடாது? எனக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இதுகுறித்து முடிவெடுப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று குறிப்பிட்டதோடு, இந்த வழக்கில் தமிழக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை அக்டோபர் 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *