Madurai AIADMK Conference 2023: தி.மு.க.வைச்சாடிய எடப்பாடி பழனிசாமி!

Advertisements

Madurai AIADMK Conference 2023 | NEET | DMK

நீட் தேர்வை இவர்களே கொண்டு வந்துவிட்டு, ரத்து செய்ய வேண்டும் என இவர்களே நாடகமாடி வருவதாகத் தி.மு.க. அரசுமீது அ.தி.மு.கப்பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்…

மதுரை: அ.தி.மு.க. பொன் விழா எழுச்சி மாநாடு, மதுரை வலையங்குளம் ரிங்ரோட்டில் நேற்று நடந்தது. மாலையில் தொடங்கிய மாநாட்டு உரை நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர்கள் ராஜலட்சுமி, செல்லூர் ராஜூ, தனபால், எஸ்.பி.வேலுமணி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி மற்றும் தமிழ்மகன் உசேன் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோல் வழங்கப்பட்டது.

மாநாட்டில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- எந்தக் கொம்பனாலும் முடியாது அ.தி.மு.க. ஒரு மாபெரும் இயக்கம். தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி. எம்.ஜி.ஆர். 1972-ம் ஆண்டு அக்டோபர் 17-ந் தேதி அ.தி.மு.க.வைத்தோற்றுவித்தார். அ.தி.மு.க.வுக்கு பொன் விழா கொண்டாடி 51-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளோம்.

இந்த 51 ஆண்டுகளில் 31 ஆண்டுகள் தமிழ் மண்ணில் அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. இந்த 31 ஆண்டுகள் கால அ.தி.மு.க. ஆட்சியில்தான் தமிழகம் ஏற்றம் பெற்றிருக்கிறது. கடை கோடியில் இருக்கின்ற சாமானியனுக்கு கூட நன்மை கிடைத்து இருக்கிறது. அனைத்து துறைகளையும் முதன்மையாக உருவாக்கியது. அ.தி.மு.க.வை எதிர்க்க எந்தக் கொம்பனாலும் முடியாது. எந்தக் கட்சியாலும் முடியாது. அ.தி.மு.க. தொண்டன், உழைப்பால் உயர்ந்தவன். எந்தப் பிரதிபலனும் பார்க்காமல் தலைமை அறிவித்தவுடன் சொந்த வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு கட்சி தான் பெரியது என்று வேலை செய்வான்.

அ.தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் ஏற்றுவோம் எனச் சபதம் ஏற்று வந்துள்ளீர்கள். இதுதான் அ.தி.மு.க.அ.தி.மு.க.வின் தொண்டன் எனக் கூறினாலே பெருமைதான். திண்டுக்கல் மாவட்டம் ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்தது. எம்.ஜி.ஆர். கட்சியைத் தோற்றுவித்து, முதன் முதலாகத் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலை சந்தித்தார். அப்போது எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய வேட்பாளர் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

ஒரு கட்சி தொடங்கி 6 மாதத்திலேயே மாபெரும் வெற்றி பெற்றது எனச் சொன்னால் அது அ.தி.மு.க.தான். எம்.ஜி.ஆர். முகத்தைப் பார்த்தால் போதும், தானாக வாக்குகள் கிடைக்கும். நமக்கு வெற்றி கிடைத்துவிடும். ஏளனம் செய்தார் 1989-ம் ஆண்டு முதன் முதலாகக் கட்சி இரண்டாகப் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டது. நான் அப்போது ஜெயலலிதா அணியில் இருந்தேன். எனக்குச் சேவல் சின்னம் அளிக்கப்பட்டது. முதன் முதலில் வெற்றி பெற்றேன்.

அதன்பிறகு நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றேன். மீண்டும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சர் ஆனேன். உங்களுடைய ஆதரவினால் முதல்-அமைச்சரும் ஆனேன். இன்றைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அன்றைக்கு எதிர்க்கட்சி தலைவராக இருந்தார். இந்த ஆட்சி 10 நாட்கள் அல்லது 3 மாதம் கூடத் தாக்குப்பிடிக்காது என்று ஏளனம் செய்தார்.

உங்களுடைய ஆதரவால் 4 ஆண்டு 2 மாதம் சிறப்பான ஆட்சியைக் கொடுத்தேன். அ.தி.மு.க.வின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்தை 50 ஆண்டுக் காலம் முன்னோக்கி கொண்டு வந்தோம். ஆனால் இப்போது 2 ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் தமிழகம் 20 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளதை பார்க்கிறோம். நீட் விவகாரம் உதயநிதி ஸ்டாலின் இன்றைய தினம் (நேற்று) நீட் தேர்வைத் தமிழகத்தில் ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் இருப்பதாக ஒரு நாடகத்தை அரங்கேற்றி இருக்கிறார். 2010-ம் ஆண்டு டிசம்பர் 21-ந் தேதி மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

2010-ம் ஆண்டு மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் சுகாதார துறையில் மந்திரியாக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குலாம்நபி ஆசாத். அப்போது தி.மு.க.வைச்சேர்ந்த எம்.பி. காந்தி செல்வன், மத்திய சுகாதார இணை மந்திரியாக இருந்தார். அந்தக் கால கட்டத்தில்தான் நீட் தேர்வு வந்தது. இதனை யாராலும் மறைக்க முடியாது. இதனை மறைத்து இன்று உண்ணாவிரதம் இருக்கிறார். இது மிகப்பெரிய ஏமாற்றுவேலை.

நீட் தேர்வைக் கொண்டு வந்தது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசும், அதில் அங்கம் வகித்த தி.மு.க.வும்தான். நாடகமாடுகிறார்கள் 2021-ம் ஆண்டு சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்தாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உதயநிதி கூறினார். ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகள் நிறைவு பெற்று 3-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளீர்கள். இதுவரை நீட் தேர்வை ரத்து செய்ய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இதற்குப் பதில் சொல்லுங்கள். மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாணவர்களை ஏமாற்றுகின்றனர்.

நீட் தேர்வைக் கொண்டு வந்தது தி.மு.க. அதனைத் தடுத்து நிறுத்தப் போராடியது அ.தி.மு.க. இதை மறைத்ததால் தி.மு.க. அரசுமீது மக்களுக்கு மிகப்பெரிய அதிருப்தி ஏற்பட்டுள்ளது. நீட் தேர்வை இவர்களே கொண்டு வந்துவிட்டு, ரத்து செய்ய வேண்டும் என இவர்களே நாடகமாடி வருகிறார்கள். இ்வ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார். எடப்பாடி பழனிசாமி தனது பேச்சின்போது, கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது செய்த சாதனை திட்டங்களைப் பட்டியலிட்டார்.

எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சி தமிழர்’ பட்டம் அ.தி.மு.க. மாநாட்டில் எடப்பாடி பழனிசாமிக்கு ‘புரட்சி தமிழர்’ என்று பட்டம் அளிக்கப்பட்டது. அதனைத் தொண்டர்கள் வழிமொழிந்து புரட்சி தமிழர் என்று கோஷம் எழுப்பினர். எம்.ஜி.ஆரை புரட்சி தலைவர் என்றும், ஜெயலலிதாவை புரட்சி தலைவி என்றும் தொண்டர்கள் அழைக்கிறார்கள். அந்த வரிசையில் எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சி தமிழர் பட்டம் வழங்கி இருப்பதாக மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisements

One thought on “Madurai AIADMK Conference 2023: தி.மு.க.வைச்சாடிய எடப்பாடி பழனிசாமி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *