மதுரையில் ரூ.1,000 கோடி மோசடி – வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றம்!

மதுரையில் தனியார் செயலிகள் மூலம் பொதுமக்களிடம் சுமார் ரூ.1,000 கோடி வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கை, பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்டையம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித், அருண் ஆகியோர் தலைமையில் தனியார் செயலிகள் மூலம் பொதுமக்களிடம் பணம் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலூர், கொட்டாம்பட்டி, அலங்காநல்லூர், பாலமேடு, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான ஏழை மற்றும் கூலித் தொழிலாளர்கள் இதில் முதலீடு செய்துள்ளனர்.

சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு முதலீடுகள் வசூலிக்கப்பட்ட நிலையில், கடந்த சில மாதங்களாக முதலீட்டுத் தொகை மற்றும் அதற்கான வருவாயை திருப்பி வழங்காமல் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் கட்டையம்பட்டி ரஞ்சித், அருண் மற்றும் நத்தம் காசம்பட்டியில் செயல்பட்ட ஏஜென்ட்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை சுமார் 40 ஆயிரம் பேர் புகார் மனுக்கள் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஏஜென்ட்களாக செயல்பட்ட 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முக்கிய நபர்களான ரஞ்சித், அவரது மனைவி பிரியதர்ஷிணி மற்றும் அருண் உள்ளிட்ட சிலர் தலைமறைவாகியுள்ளனர்.

இதற்கிடையே, திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே காசம்பட்டியைச் சேர்ந்த ராசு என்பவர் இந்த நிறுவனத்தின் ஏஜென்டாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து, அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் ராசுவின் உடலை நத்தம்–மதுரை நெடுஞ்சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது, ராசு கொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சந்தேகம் தெரிவித்தனர். இதுதொடர்பாக காவல்துறையினருடன் அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் கலைந்து செல்ல மறுத்ததால், போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். பின்னர் ராசுவின் உடல் ஆம்புலன்ஸ் மூலம் உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதைத் தொடர்ந்து, ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

இந்நிலையில், பொதுமக்களிடம் ரூ.1,000 கோடி அளவுக்கு பணம் வசூலித்து மோசடி செய்ததாகக் கூறப்படும் இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தும் வகையில், வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *