Lok Sabha:ஜி.எஸ்.டி, பணமதிப்பிழப்பு மூலம் மக்கள்மீது தாக்குதல்: ராகுல் தாக்கு!

புதுடில்லி: ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு மூலம் மக்கள்மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது எனக் காங்கிரஸ் எம்.பி ராகுல் குற்றம் சாட்டியுள்ளார்.

பட்ஜெட் மீதான விவாதத்தில், லோக்சபாவில் ராகுல் பேசியதாவது: இந்திய மக்கள் அச்சத்துடன் வாழ்கின்றனர். நாடு முழுவதும் அனைத்து விஷயங்களிலும் மக்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டுள்ளது. விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பா.ஜ., வில் உள்ள ஒரு சில தலைவர்களே பயத்துடன் உள்ளனர். பா.ஜ., ஆட்சியில் மத்திய அமைச்சர்களே பயத்துடன் வாழ்கின்றனர்.

சக்கர வியூகம்
மகாபாரதத்தில் அபிமன்யூ சக்கர வியூகத்தில் சிக்கியது போலத் தற்போது இந்திய மக்களின் நிலை உள்ளது. பா.ஜ., வின் சக்கர வியூகம் நாட்டு மக்களுக்கு உதவவில்லை. சக்கர வியூகத்திற்குள் துரோணர், கர்ணன், அஸ்வத்தாமன் இருந்தது போல் இங்கு மோடி, அமித்ஷா உள்ளனர். பா.ஜ., ஆட்சியில் ஒருவர் மட்டும் தான் பிரதமர் ஆகக் கனவு காண முடியும். மற்றவர்களுக்கு உரிமையில்லை. ஒருவரே பிரதமராக முடியும். பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரதமராக விரும்பினால் அப்போது பிரச்னை ஏற்படும்.

மக்கள்மீது தாக்குதல்
நாட்டில் பயம் தரக்கூடிய சூழல் நிலவுகிறது. இங்குள்ள பா.ஜ., உறுப்பினர்களின் சிரிப்பில் கூடப் பயம் தெரிகிறது. சிறு, குறு தொழில் செய்பவருக்கு நள்ளிரவு வருமான வரி மற்றும் ஜி.எஸ்.டி துறையிலிருந்து அழைப்பு வருகிறது. ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பிழப்பு மூலம் மக்கள்மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் அறிவித்த பணி பயிற்சி திட்டத்தால், நாட்டில் உள்ள 99 சதவீத இளைஞர்களுக்கு வேலை கிடைக்காது.

கல்வித்துறைக்கு குறைவான நிதி
கடந்த 20 ஆண்டுகளில் கல்விக்கு குறைவான நிதி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித்துறைக்கு 2.5 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுவே முதல் முறை. கடந்த 10 ஆண்டுகளில் 70 முறை போட்டி தேர்வில் வினாத்தாள்கள் கசிவு நடந்துள்ளது. அதுபற்றிப் பட்ஜெட்டில் ஒரு வார்த்தை கூட இல்லை. நுழைவு தேர்வுக்கான நெறிமுறைகள்குறித்து பட்ஜெட்டில் எதுவும் அறிவிக்கப்படவில்லை.

வரி தீவிரவாதம்
வருமான வரி துறை மற்றும் அமலாக்கத்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை ஒடுக்க முயற்சி செய்யப்படுகிறது. வரி தீவிரவாதத்தால் சிறு, குறு வியாபாரிகள் பாதிக்கப் பட்டுள்ளனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலையின்மை தொடர்கிறது. மறுபுறம் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது.கொரோனா காலத்தில் கைத்தட்டுவதும், மொபைல் போனில் டார்ச் அடிப்பதும் தான் இளைஞர்களுக்கு வழங்கும் வேலைவாய்ப்பா?.

முதுகில் குத்துவது போன்றது
ராணுவத்தில் பணிபுரியும் அக்னி வீரர்களுக்கு ஓய்வூதியம் எதுவும் தரப்படுவதில்லை. நான் விவசாயிகளைச் சந்திப்பதை இந்த அரசு தடுக்க பார்த்தது. சொத்துக்கள் விற்பனை செய்யும்போது கூடுதல் வரி விதிப்பது நடுத்தர மக்களின் முதுகில் குத்துவது போன்றது. வேளாண்பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய இண்டியா கூட்டணி விரும்புகிறது.

முதலாளிகளுக்காகப் பட்ஜெட்
இதுகுறித்து பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இடம்பெறாதது ஏன்?. பெரும் முதலாளிகளுக்காகப் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடுத்தர மக்கள் மற்றும் விவசாயிகளுக்கான எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. நீண்ட கால முதலீட்டு லாபங்களுக்கான வரியை உயர்த்தியிருப்பது நடுத்தர மக்களின் நெஞ்சில் குத்தும் செயல்.

அல்வா கொடுத்த பட்ஜெட்

நாட்டு மக்களுக்கு அல்வா கொடுக்க 20 பேர் இணைந்து பட்ஜெட்டை தயாரித்துள்ளனர். அந்த அல்வாவின் பெரும்பகுதி குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட் தயாரிப்பில் தலீத், ஆதிவாசி, பழங்குடியினர் யாரும் பங்குகெடுக்கவில்லை. ஹிந்து என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் ஹிந்து மதத்தைப் புரிந்துக்கொள்ளவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என 95 சதவீத மக்கள் விரும்புகின்றனர். இவ்வாறு ராகுல் பேசினார்.

ஏ1, ஏ2
ராகுல் பேசுகையில், அம்பானி, அதானி பெயர்களைக் குறிப்பிட்டு பேசினார். அப்போது அவர்களின் பெயரைக் குறிப்பிடக் கூடாது எனச் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியதால், ஏ1, ஏ2 எனக் குறிப்பிட்டு ராகுல் பேசினார்.

கிரண் ரிஜிஜூ எதிர்ப்பு
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ பேசியதாவது: பார்லிமென்ட் மாண்பை குலைக்கும் வகையில் ராகுல் பேசுகிறார். லோக்சபா சபாநாயகருக்கே ராகுல் சவால் விடுகிறார். இவ்வாறு அவர் பேசினார்.

சபாநாயாகர் வேண்டுகோள்
இதற்கிடையே,‛‛ ராகுல் உண்மையைப் பேச வேண்டும். உண்மைக்குப் புறம்பானதை அவையில் பேசக் கூடாது.” என லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *