Lok Sabha Elections 2024: ரூ. 36 கோடிக்குச் சொத்து; சொந்தமாகக் கார் இல்லை..அமித்ஷா வேட்பு மனுவில் தகவல்!

Advertisements

காந்திநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனக்கு ரூ.36 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகள் இருப்பதாகவும், சொந்தமாகக் கார் இல்லை எனவும் தனது வேட்பு மனுவில் தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள் துறை அமைச்சருமான அமித் ஷா, குஜராத் மாநிலம், காந்தி நகரில் போட்டியிடுகிறார். இந்நிலையில் அமித் ஷா, நேற்று தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவரது பிரமாணப் பத்திரத்தில் தனக்கு ரூ.20 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ.16 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும், ரூ.72 லட்சம் மதிப்பிலான நகைகள், தனது மனைவியிடம் ரூ.1.10 கோடி மதிப்பிலான நகைகள் இருப்பதாகவும், சொந்த கார் இல்லை எனவும் அமித் ஷா பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். அமித் ஷா மனைவி சோனல் ஷாவுக்கு ரூ.31 கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளன. இதில் ரூ.22.46 கோடி மதிப்புள்ள அசையும் சொத்துகள், ரூ. 9 கோடி மதிப்புள்ள அசையா சொத்துகள் அடங்கும்.

அமித் ஷாவுக்கு ரூ.15.77 லட்சமும், அவரது மனைவிக்கு ரூ.26.32 லட்சமும் கடன் உள்ளதாகப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமித் ஷாவின் ஆண்டு வருமானம் 2022-23ல் ரூ.75.09 லட்சம் எனவும், அவரது மனைவியின் ஆண்டு வருமானம் ரூ.39.54 லட்சம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எம்பி-க்கான சம்பளம், வீடு மற்றும் நில வாடகைகள், விவசாய வருமானம், பங்குகள் மற்றும் ஈவுத்தொகை ஆகியவை தனது வருமான ஆதாரங்கள் என அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.

பிரமாணப் பத்திரத்தின் தொழில் பிரிவில், அமித் ஷா ஒரு விவசாயி மற்றும் சமூக சேவகர் எனத் தெரிவித்துள்ளார். தன் மீது 3 கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா, குஜராத்தின் காந்தி நகர் எம்எல்ஏ-வாக இருந்துள்ளார். அதன் பின்னர் காந்தி நகர் மக்களவை தொகுதி உறுப்பினராக 30 ஆண்டுகளாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாஜக தலைவர்கள் வாஜ்பாய் அத்வானி ஆகியோர் எம்பிக்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி இது. பிரதமர் நரேந்திர மோடி இந்தத் தொகுதியில் தான் வாக்காளராக இருக்கிறார்.

கடந்த தேர்தலில் இந்தத் தொகுதியில் 5 லட்சத்து 57 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *