
தமிழ்நாடு ஸ்டேட் மார்கெட்டிங் கார்ப்பரேஷன் (TASMAC),பல்வேறு வகையான மதுபானங்களின் விலையை உயர்த்தியுள்ளது. பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த விலை உயர்வு, அரசின் கஜானாவை நிரப்பும்.
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் விலை ரூ.10 முதல் 80 வரை அதிகரிக்கக்கூடும் என்று தெரிய வந்துள்ளது. அரசு நடத்தும் மதுபானக் கடைகளில் ரூ.10 முதல் ரூ.80 வரை விலை உயர்வு என்பது பீர், பிராந்தி, விஸ்கி மற்றும் ரம் என பல்வேறு மதுபானங்களின் விலையை அதிகரிக்கிறது.
டாஸ்மாக் செய்துள்ள இந்த விலை உயர்வால், 650 மில்லி பீர் பாட்டில் வாங்க ரூ.10 கூடுதல் செலவு செய்ய வேண்டியிருக்கும். நேற்று (2024 ஜனவரி 29, திங்கள்கிழமை) வெளியான இந்தத் தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக டிவிட்டரில் பதிவுகள் வைரலாகி வருகின்றன.
180 மில்லி (குவார்ட்டர் என பிரபலமாக அறியப்படும்) பிராந்தி, விஸ்கி மற்றும் ரம் ஆகியவற்றின் ‘சாதாரண’ மற்றும் ‘நடுத்தர’ வகைகளின் விலை 10 ரூபாய் அதிகமாகும், ‘பிரீமியம்’ குவாலிடி குவார்ட்டரின் விலை ரூ.20 விலை அதிகரிக்கிறது.
திருத்தப்பட்ட அட்டவணையின்படி, அதிக அளவில் விற்கப்படும் மதுபானங்கள், அதற்கேற்ப விலை அதிகமாக இருக்கும். தமிழகத்தில் மொத்தம் 4,829 டாஸ்மாக் மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. டாஸ்மாக் கடைகளில் மொத்தம் சாதாரண வகைகளில் 43, நடுத்தர வகைகளில் 49, பிரீமியம் வகை பிராண்டுகளில் 128, பீர்களில் 128 வகைகள், ஒயின் வகைகளில் 13 ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன.
இதுதவிர, ‘எலைட்’ டாஸ்மாக் கடைகள் மூலம் பிரத்யேகமாக வெளிநாட்டு மதுபானங்கள் விற்கப்படுகின்றன. டாஸ்மாக் கடைகளில் சாதாரண மதுபான வகைகள் 40 சதவீத அளவுக்கு விற்பனையாகின்றன. குவார்ட்டர் பாட்டில் ரூ.130, ஆஃப் பாட்டில் விலை ரூ.260 என்றும், ஃபுல் பாட்டில் ரூ.520 என்றும், மீடியம் ரேஞ்ச் மதுபானங்கள் ரூ.160 முதல் ரூ.640 வரை விற்கப்படுகின்றன.
மதுபானங்களின் விலை அவ்வப்போது டாஸ்மாக் அதிகரித்து வருகிறது. இன்னும் இரு நாட்களில் பிப்ரவரி மாதம் முதல் மதுபானங்களின் விலையை உயர்த்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. இதன்படி, சாதாரண மற்றும் நடுத்தர வகை மதுபானங்கள் குவார்ட்டர் பாட்டிலுக்கு ரூ.10, ஆஃப் பாட்டிலுக்கு ரூ.20, ஃபுல் பாட்டிலுக்கு ரூ.40 விலை உயர்த்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.
விலை உயர்வு என்பதற்கான காரணம், மூலப்பொருட்கள் விலை அதிகரிப்பு என்று கூறப்படுகிறது. வரி உயர்வு, மூலப் பொருட்கள் விலை உயர்வு காரணமாக, மதுபானங்களின் விலையை உயர்த்த வேண்டும் என மதுபான ஆலை நிறுவனங்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்து வந்தன. எனவே, இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
டாஸ்மாக் விலை உயர்வு தொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்று டாஸ்மாக் மண்டல மேலாளர்கள் தெரிவித்துள்ளனர். டாஸ்மாக் கடைகளில் ஊழியர்கள் ஏற்கெனவே ஒரு பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வாங்கி வருவதாக கூறப்படுகிறது.



