Dengue Fever: சட்டக்கல்லூரி மாணவன் பலி!

டெங்கு காய்ச்சலுக்கு சட்டக்கல்லூரி மாணவன் பலி சம்பவத்தில் சுகாதாரத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தி அடுத்த ராயர்பாளையம் அபிராமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சரண் 24. இவர் தர்மபுரி சட்டக் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரணுக்கு ஏற்பட்ட திடீர் உடல் நல குறைவின் காரணமாகப் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரைக் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்த்தனர்.

அங்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று நள்ளிரவு சிகிச்சை பலனின்றி சட்டக் கல்லூரி மாணவன் சரண் பரிதாபமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தகவல் பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டுத்தீ போலப் பரவி உள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறுகையில் உடனடியாகப் பல்லடம் நகராட்சி நிர்வாகம் மாவட்ட சுகாதாரத் துறையினர் கொசு மருந்து தெளித்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வழிவகை செய்து தர வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளனர்.

பல்லடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு சட்டக் கல்லூரி மாணவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *