
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிக்கு மாற்றக் கோரிய மனுக்களை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்துள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான விசாரணையை சிபிக்கு மாற்றுவது, கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது உள்ளிட்ட கோரிக்கைகளைக் கொண்ட 7 பொதுநல மனுக்கள் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் கொண்ட அமர்வுமுன் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது வழக்குகள் ஒன்றன்பின் ஒன்று என வரிசையாக விசாரிக்கப்படும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
அரசியல் கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனுக்கள் முதலில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அப்போது மக்கள் நலனே முக்கியம் எனக் கூறிய நீதிபதிகள், பொதுக்கூட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்குவது குறித்த மனு சென்னை அமர்வில் நிலுவையில் உள்ளதால் இடைக்கால உத்தரவு பிறப்பித்தால் அதைப் பாதிக்கும் என்றனர்.
அந்த மனுவுடன் இவற்றையும் இடையீட்டு மனுவாகத் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் காவல்துறை விசாரணையில் திருப்தி இல்லை என்றால் மாற்றலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடக்கத்திலேயே விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை அரசியல் மேடையாக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் மனுவைத் தள்ளுபடி செய்தனர். கூட்ட நெரிசல் உயிரிழப்புக்கான இழப்பீடு தொடர்பான மனுக்களுக்குப் பாதிக்கப்பட்டோர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யவும், இதற்கு 2 வாரங்களில் அரசு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
