Advertisements

தங்கள் முதல்வருக்கு வாக்களித்திருந்தால் கேட்டது கிடைத்திருக்கும் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறியதைத் தொடர்ந்து, அமைச்சர் ஸ்ரீநாத் மறுநாள் சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்து, அனைத்துப் பேருந்துகளும் அந்த நிறுத்தத்தில் நின்று செல்வதை உறுதி செய்யுமாறு பணிமனை மேலாளருக்கு அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் அருகே ஓடக்கரையில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தைத் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி திறந்து வைத்தார். அப்போது, அங்கு நின்ற பெண்மணி இங்குப் பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டிருந்தாலும், ஒரு பேருந்துகூட நின்று செல்வதில்லை என்று குற்றம் சாட்டினார்.
இதற்குத், திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, நீங்கள் தங்கள் முதல்வருக்கு வாக்கு அளித்திருக்க வேண்டும் என்று கூறினார். உடனே நீங்கள் இப்படி கூறக் கூடாது என்று அந்த பெண் கூறினார். ஆனால், அதை கண்டுகொள்ளாத கனிமொழி அங்கிருந்து கிளம்பி சென்றார். இந்தச் செயல் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் அமைச்சர் ஸ்ரீநாத் சம்பவம் நடந்த இடத்திற்கு நேரில் சென்று புதிதாகத் திறக்கப்பட்ட பேருந்து நிறுத்தத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடனடியாக பேருந்து பணிமனை மேலாளரை அழைத்து பேருந்து நின்று செல்ல அறிவுறுத்தினார். தொடர்ந்து அந்த பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்த அமைச்சர் ஸ்ரீநாத் தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்த அரசு பேருந்தை நிறுத்தினார்.
அந்த பேருந்தில் ஏறிய அவர், பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனரிடம் அனைத்து பேருந்து நிறுந்தங்களிலும் பேருந்துகள் நிற்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஓடக்கரை பேருந்து நிறுத்தத்தில் ஏறிய அவர், அடுத்த 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள வீரபாண்டியபட்டணம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கினார். மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள பேருந்து நிறுத்தத்தில் பழைய முதல்வரின் புகைப்படம் வைக்கப்பட்டது குறித்து கேட்டதற்கு உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.
Advertisements


