ஈரானை வம்பிழுக்கும் அமெரிக்கா.! பகிரங்கமாக மிரட்டல் விடுத்த ஈரான்.!

Advertisements

சர்வதேச அரசியலில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள அமெரிக்கா – ஈரான் மோதல் புதிய மற்றும் மிக விபரீத கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக அறிவித்துள்ள அமெரிக்கா, தற்போது வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பயங்கரமான ‘பொருளாதார போரை’ (Economic D-Day) பிரகடனப்படுத்தியுள்ளது.

மறுபுறம், “எங்கள் மீதான தடைகள் தொடர்ந்தால் ஹார்முஸ் நீரிணை வழியாக ஒரு சொட்டு எண்ணெய் கூட வெளிநாடுகளுக்குச் செல்ல அனுமதிக்க மாட்டோம்” என்று ஈரான் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளது. உலகப் பொருளாதாரத்தையே உலுக்கப் போகும் இந்த பரபரப்பான நிகழ்வுகளின் விரிவான தொகுப்பை இப்போது பார்ப்போம்..

ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைகள் முடியும் தருவாய்க்கு வந்துள்ள நிலையில், அடுத்த கட்டமாக அந்நாட்டின் பொருளாதார உயிர்நாடிகளை முழுமையாகத் துண்டிக்கும் முயற்சியில் அமெரிக்கா இறங்கியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்காட் பெசென்ட் வெளியிட்டுள்ள அதிர்ச்சி அறிக்கை சர்வதேச நாடுகளை உலுக்கியுள்ளது.

“அதிபர் டிரம்ப் ஈரானின் ராணுவத் திறன்களைச் சிதைத்து, அதன் ஆயுதத் தொழிற்சாலைகளில் கிட்டத்தட்ட 100 சதவீதத்தை அழித்துவிட்டார். இப்போது நாம் இறுதிக்கட்டத்தை (Endgame) நெருங்கியுள்ளோம். இன்று விடியற்காலையில் ஒரு பொருளாதாரப் பேரழிவு நாள் (Economic D-Day) தொடங்குகிறது.

இது எதிரிக்கு எதிராக இதுவரை தொடுக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய பொருளாதாரத் தாக்குதலாகும். தெஹ்ரான் தனித்து நிற்கும் வரை, அந்த கொடுங்கோல் ஆட்சியைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பொருளாதார உயிர்நாடியையும் துண்டிப்பதே நமது ஒட்டுமொத்த நோக்கம்” என்று அவர் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்.

அமெரிக்காவின் இந்த முற்றுகைக்கு ஆதரவளிக்கும் அல்லது பங்கெடுக்கும் எந்தவொரு நாடும் ஈரானின் நேரடி எதிரியாகக் கருதப்படும் என்றும், குறிப்பாக வளைகுடா நாடுகளுக்கு இந்த கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..அமெரிக்காவின் இந்த பொருளாதாரப் போர் அறிவிப்புக்கு ஈரான் சற்றும் பின்வாங்காமல் பதிலடி கொடுத்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பிறகு, உலகளாவிய எரிபொருள் விநியோகத்தில் 30 சதவீதத்திற்கும் மேல் பங்களிக்கும் முக்கியமான ஹார்முஸ் நீரிணையை முழுமையாக முடக்குவதாக ஈரான் முன்பே அறிவித்திருந்தது. தற்போது அமெரிக்காவின் புதிய பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலளிக்கும் விதமாக,
ஈரான் தேசிய பாதுகாப்புச் சபையின் செயலாளர் மொஹ்சென் ரெசாய் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், “வளைகுடா நாடுகளில் இருந்து ஒரு சொட்டு எண்ணெய் கூட இனி ஏற்றுமதி செய்யப்படாது” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.மேலும், ஹார்முஸ் நீரிணையில் விதிகளை மீறும் கப்பல்களுக்கு கடும் அபராதம், சிறைபிடித்தல் மற்றும் பறிமுதல் போன்ற தண்டனைகள் வழங்கப்படும் என்றும், அத்தகைய கப்பல்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் என்றும் ஈரான் அரசு எச்சரித்துள்ளது.
ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபப் மற்றும் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாஹே ஆகியோர் கூட்டாகக் கூறுகையில், “கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்கத் தடைகளைச் சந்தித்து வரும் ஈரானுக்கு இது புதியதல்ல; இந்த பொருளாதாரத் தாக்குதல்களும் தோல்வியடையும், மாறாக இது அமெரிக்காவையே பூமரங் போல திருப்பித் தாக்கும்” என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

அமெரிக்காவின் நேரடிப் பொருளாதார முற்றுகையும், அதற்கு ஈரானின் எண்ணெய் ஏற்றுடைப்புத் தடையின் மூலம் தரப்படும் எதிர்விணையும் உலக நாடுகளை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன. கச்சா எண்ணெய் விநியோகம் முழுமையாக முடங்கினால், அது உலகளாவிய எரிபொருள் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அமெரிக்கா – ஈரான் இடையேயான இந்த மோதல் சர்வதேச அரசியலில் அடுத்தகட்டமாக எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *