
டாக்கா: இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வங்கதேச மகளிர் அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கு இடையிலான இந்தப் போட்டி நேற்று வங்கதேசத்தின் டாக்கா நகரிலுள்ள ஷேர் பங்களா நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 43 ஓவர்களில் 152 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.அந்த அணியின் கேப்டன் நிகர் சுல்தானா அதிகபட்சமாக 39 ரன்கள் சேர்த்தார். முர்ஷிதா கதுன் 13, பர்கானா ஹோக் 27, ரிது மோனி 8, ரபேயா கான் 10, நஹிதா அக்தர் 2, பாஹிமா கதுன் 12, சுல்தானா கதுன் 16 ரன்கள் சேர்த்தனர்.
இந்திய அணி தரப்பில் அமன்ஜோத் கவுர் 31 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். தேவிகா வைத்யா 2 விக்கெட்களையும், தீப்தி சர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். வங்கதேச அணி பேட்டிங் செய்தபோது 16-வது ஓவரில் பலத்த மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. மழை நின்றதும் போட்டி தொடங்கியபோது ஆட்டம் 44 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
இதையடுத்து இந்திய அணி வீராங்கனைகள் விளையாடத் தொடங்கினர். ஆனால் வங்கதேச வீராங்கனைகள் மருபா அக்தர், ரபேயா கான் ஆகியோரது அபார பந்துவீச்சால் இந்திய அணியின் விக்கெட்கள் விரைவாக விழுந்தன.அணியில் அதிகபட்சமாக தீப்தி சர்மா மட்டும் 20 ரன்கள் எடுத்தார்.
பிரியா பூனியா 10, ஸ்மிருதி மந்தனா 11, யாஸ்திகா பாட்டியா 15, கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 5, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 10, அமன்ஜோத் கவுர் 15, தேவிகா வைத்யா 10, பூஜா வஸ்த்ராகர் 7, பாரெட்டி அனுஷா 2 ரன்கள் எடுத்தனர்.
இதனால் 35.5 ஓவர்களில் 113 ரன்களுக்கு இந்தியா ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து டக்வொர்த் லீவிஸ் முறைப்படி வங்கதேச அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
