வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய ஏ அணி வெளியேறியுள்ளது.
கத்தார் தலைநகர் தோகாவில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசியக் கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா ஏ – இலங்கை ஏ அணிகள் மோதின. போட்டியில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்து, 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 317 ரன்கள் எடுத்தது. இதில், அதிகபட்சமாக அபிஷேக் ஷர்மா 78 ரன்களும், திலக் வர்மா 53 ரன்களும், ஷபாஸ் அகமது 54 ரன்களும் எடுத்தனர்.
இதையடுத்து 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை ஏ அணி, 41 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 318 ரன்கள் எடுத்தது. இதில், மிகவும் சிறப்பாக விளையாடிய லசித் குரூஸ்புல்லே 116 ரன்களும், சினேத் ஜெயவர்த்தனே 105 ரன்களும், நிஷான் மதுஷ்கா 58 ரன்களும் எடுத்தனர். இதன்மூலம், இலங்கை ஏ அணி இந்திய ஏ அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மேலும் இந்திய அணி நடப்பு தொடரில் இருந்து வெளியேறியது.


