IND vs ENG 5th Test: 3-வது நாளிலேயே முடிவுக்கு வந்த போட்டி.. இந்தியா இன்னிங்ஸ் வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

தர்மசாலா: இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையிலேயே இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றி இருந்தது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தர்மசாலாவில் கடந்த 7-ம் தேதி தொடங்கியது.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, முதல் இன்னிங்சில் 218 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 477 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

இந்தியா தரப்பில் அதிகபட்சமாகச் சுப்மன் கில் 110 ரன்களும், ரோகித் 103 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாகச் சோயப் பஷீர் 5 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் டாம் ஹார்ட்லி தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

பின்னர் 259 ரன்களுடன் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து, இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினின் சுழலில் சிக்கி திணறியது. அவரது பந்துவீச்சில் இங்கிலாந்து வீரர்கள் ஜாக் கிராலி ரன் எதுவுமின்றியும், டக்கெட் 2 ரன்னிகளிலும், ஒல்லி போப் 19 ரன்களிலும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 2 ரன்களிலும், பென் போக்ஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதன் பின் களமிறங்கி சிறிது நேரம் அதிரடி காட்டிய பேர்ஸ்டோ 39 ரன்கள் அடித்த நிலையில் குல்தீப் ஓவரில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

ஒரு புறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் ஜோ ரூட் தனி ஆளாகப் போராடினார். ஆனால் யாரும் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. முடிவில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 195 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் வெறும் 3 நாட்களிலேயே முடிவுக்கு வந்த இந்தப் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இங்கிலாந்து தரப்பில் அதிகபட்சமாக ஜோ ரூட் 84 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், பும்ரா மற்றும் குல்தீப் 2 விக்கெட்டுகளும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *