IND vs ENG 1st Test: இங்கிலாந்து அணி ஆல் அவுட்!

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவர்கள் தாக்குப்பிடித்து 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் அடித்தார்.

ஐதராபாத்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி அந்த அணி முதலில் பேட்டிங் செய்தது.

அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலியும், பென் டக்கெட்டும் களமிறங்கினர். தொடக்கத்தில் இருவரும் அதிரடியில் இறங்கி பவுண்டரிகளை விரட்டினர். வேகப்பந்துவீச்சு எடுபடாததால், இந்திய கேப்டன் ரோகித் சர்மா சுழல் பந்துவீச்சை அறிமுகப்படுத்தினார்.

இதையடுத்து அஸ்வின், ஜடேஜா இருவரும் சிறப்பாக பந்துவீசி எதிரணியை மிரட்டினர். இந்திய சுழற்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து இங்கிலாந்து அணி தடுமாடியது.

ஜாக் கிராலி(20), பென் டக்கெட்(35), ஜோ ரூட்(29), பேர்ஸ்டோவ்(39), ஆகியோர் சிறந்த தொடக்கம் கிடைத்தும் அதனை பெரிய ஸ்கோராக மாற்ற முடியாமல் ஆட்டமிழந்தனர். ஒல்லி போப்(1), பென் போக்ஸ்(4) இருவரும் வந்த வேகத்தில் வெளியேறினர். ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் நிலைத்து நின்று விளையாடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அரைசதம் அடித்து அசத்தினார். அவருக்கு சிறிது நேரம் ஒத்துழைப்பு கொடுத்த டாம் ஹார்ட்லி 23 ரன்கள் அடித்தார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவர்கள் தாக்குப்பிடித்து 246 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 70 ரன்கள் அடித்து கடைசி விக்கெட்டாக ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் அஸ்வின் மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்டுகளும், அக்சர் படேல் மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுளும் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *