Income Tax Raid: காரில் கட்டு கட்டாக பணம்!

வங்கி அருகே நின்றுகொண்டிருந்த காரில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, அந்த காரில் இருந்து ரூ. 2.64 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ராய்ப்பூர்: 18-வது மக்களவைக்கான தேர்தல் அறிவிப்பு, இன்னும் சில வாரங்களில் இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளது. ஆனால், தற்போதே, தலைநகர் டெல்லி முதல் அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் பணிகளை, பல்வேறு கட்சிகள் சுறுசுறுப்பாகத் தொடங்கிவிட்டன.

இந்தநிலையில் சத்தீஷ்கர் மாநிலம் டிரக் மாவட்டம் பைலை பஹடி நகரில் செக்டார்-1 பகுதியில் உள்ள வங்கி அருகே சந்தேகத்திற்கு இடமான வகையில் 2 கார்கள் நின்றுகொண்டிருப்பதாக போலீசாருக்கு இன்று அதிகாலை ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீசார் 2 கார்களில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். மேலும், கார்களிலும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, ஒரு காரில் கட்டுக்கட்டாக 2 கோடியே 64 லட்ச ரூபாய் பணம் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

பணத்தை பறிமுதல் செய்த போலீசார், காரில் இருந்த 3 பேரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் பணத்திற்கு உரிய ஆதாரம் அளிக்காததால் போலீசார் அதை பறிமுதல் செய்தனர். மேலும், இது குறித்து வருமானவரித்துறையினருக்கு தகவல் கொடுத்த போலீசார், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *