
இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் இடையே தடையற்ற வணிக உடன்படிக்கை கையொப்பம் ஆகியுள்ளது. இதன்மூலம் நியூசிலாந்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு முழுவதும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
இந்தியா – நியூசிலாந்து நாடுகள் இடையே 9 மாதங்களாக நடைபெற்ற பேச்சுக்குப் பின் தடையற்ற வணிகத்துக்கான உடன்பாடு கையொப்பம் ஆகியுள்ளதாக இந்திய வணிகம் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
அவர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவில் இரு நாடுகளின் உறவில் இது குறிப்பிடத் தக்க மைல்கல் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த உடன்பாடு நடைமுறைக்கு வந்தால் இந்திய ஏற்றுமதிப்பொருட்களுக்கு நியூசிலாந்தில் 100 விழுக்காடு வரி விலக்கு அளிக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் இந்தியாவில் உற்பத்தி, உட்கட்டமைப்பு, சேவைகள், புத்தாக்கம் ஆகிய துறைகளில் அடுத்த 15 ஆண்டுகளில் நியூசிலாந்து இரண்டாயிரம் கோடி டாலர்களை முதலீடு செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து , நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வீடியோவில், இந்தியாவுடனான தடையற்ற வணிக உடன்பாடு நிறைவேறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இது நியூசிலாந்து உழவர்கள், வணிகர்கள் தங்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கவும், புதிய வேலைவாய்ப்பை உருவாக்கவும், நியூசிலாந்து மக்களின் வருமானத்தை உயர்த்தவும் புதிய கதவுகளைத் திறந்து விட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.



