E. V. Velu: 2வது நாளாக  தொடரும் சோதனை!

Advertisements

சென்னை, கரூர், கோவை, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் நேற்று தொடங்கிய வருமான வரி சோதனை, 2வது நாளாக இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அவரது வீடு, அலுவலகங்கள் என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. அதேபோல் காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் போன்ற தனியார் கட்டுமான நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

இந்நிலையில், அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்பான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. அமைச்சர் எ.வ.வேலு மகன் கம்பன் இல்லத்திலும் நேற்று இரவு முதல் தொடர்ந்து வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையில் உள்ள காசா கிராண்ட், அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு தொடர்பான இடங்களிலும் இந்த சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கோவையில் திமுக பிரமுகர் மீனா ஜெயக்குமார் மகன் ஸ்ரீராம், திமுக முன்னாள் கவுன்சிலர் சாமி ஆகியோரின் வீடுகளில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றது. மீனா ஜெயக்குமாரின் வீடு, அவரது மகன் ஸ்ரீராமின் அலுவலகம், சௌரிபாளையம் காசா கிராண்ட் நிறுவன அலுவலகம் ஆகிய இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை சோதனை தொடர்ந்து வருகிறது.

கரூரில் மறைந்த திமுக முன்னாள் மாவட்ட செயலாளர் வாசுகி முருகேசனின் சகோதரி பத்மாவின் வீட்டில் வருமான வரி அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். அதேபோல் காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள சுரேஷ் என்பவருக்கு சொந்தமான நிதி நிறுவன அலுவலகம், கே.வி.பி நகர் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலும் சோதனை தொடர்ந்து வருகிறது.

விழுப்புரத்தில் பிரபல தொழிலதிபர் பிரேம்நாத் என்பவரது வீட்டிலும், அவருக்கு சொந்தமான கோல்டன் பார்க் சொகுசு விடுதி, மார்பல்ஸ் விற்பனை நிலையம் என மூன்று இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *