
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளியைக் காவல்துறையினர் அடித்துக் கொன்றதால் தமிழகமே அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையிலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டபடி ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையைத் தொடக்கி வைத்துள்ளார்.
சிவகங்கைக் காவல்துறையினரால் அஜித்குமார் அடித்துக்கொல்லப்பட்ட வழக்கில் ஆளும் திமுக அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை பதிலளிக்காத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே திட்டமிட்டபடி ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் திமுக உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தைத் தொடக்கி வைத்துள்ளார்.
அப்போது பேசிய அவர், மத்திய பாஜக அரசு தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராகச் செயல்படுவதாகவும், மாநிலத்துக்கு ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் வஞ்சிப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.
பாஜகவைப் பற்றிக் குற்றச்சாட்டுகளை அடுக்கிய திமுக தலைவர், அஜித்குமார் கொலைவழக்கைப் பற்றி அதிகம் பேசாமல் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக மட்டுமே கூறிவிட்டுச் சென்றார்.





