Deepti Sharma: கிரிக்கெட் வீராங்கனைக்கு டிஸ்பி பதவி!

Advertisements

உ.பி.,யில், கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு, துணைக் காவல் கண்காணிப்பாளர் பதவி வழங்கப்பட்டது.

லக்னோ: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனை தீப்தி சர்மா. தற்போது இந்திய அணியில் ஆல்ரவுண்டராக அவர் ஜொலித்து வருகிறார். மேலும் இந்திய அணியின் மேட்ச் வின்னராகவும் உருவெடுத்துள்ளார்.

டி20 சர்வதேசப் போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை சமீபத்தில் தீப்தி சர்மா படைத்தார். ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளை பொறுத்தவரையிலும், டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒரே இந்தியர் என்ற பெருமையையும் தீப்தி சர்மா பெற்றார்.

ஆடவர் அணியைப் பொறுத்தவரை டி20 போட்டிகளில் யுஸ்வேந்திர சாகல் அதிகபட்சமாக 91 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய ஒன்பதாவது மகளிர் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா ஆவார்.

இந்நிலையில் தீப்தி சர்மாவின் திறமையை அங்கீகரிக்கும் வகையில் உத்தரப் பிரதேச மாநில அரசு அவரை துணைக் காவல் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி.) நியமித்துள்ளது. தீப்தி சர்மாவுக்கு விருது மற்றும் 3 கோடி ரூபாய் ரொக்கப்பரிசும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்து தெரிவித்து பணி நியமன கடிதத்தையும் உத்தரப் பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் வழங்கினார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள அவத்புரி பகுதியைச் சேர்ந்தவர் தீப்தி சர்மா. இதே பகுதியை சேர்ந்த தீபக் சாகர் போன்றவர்களுடன் சேர்ந்து தனது கிரிக்கெட் திறமையை வளர்த்துக்கொண்ட இவர், 2014ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இதுவரை 194 போட்டிகளில் விளையாடி 229 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கத்தையும், பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். டிசம்பர் 2023ம் ஆண்டு ஐ.சி.சி.யின் சிறந்த வீராங்கனை விருது தீப்தி சர்மாவுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதைப் பெற்ற இரண்டாவது இந்திய பெண் கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா ஆவார்.

Advertisements

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *