பிரபல இந்தி நடிகர் சல்மான்கானுக்கு ரவுடி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் அச்சுறுத்தலுள்ள நிலையில், சமீபத்தில் அவரது வீடு அருகே துப்பாக்கி சூடு நடந்தது.
இதற்கிடையே மும்பையில் சல்மான்கானின் நெருங்கிய நண்பரும், முன்னாள் மந்திரியுமான பாபா சித்திக் கொல்லப்பட்டார். இச்சம்பவத்தையடுத்து சல்மான்கானுக்கு கொலை மிரட்டல்கள் தொடர்ந்து விடுக்கப்பட்டது.
மும்பை போக்குவரத்து போலீசின் வாட்ஸ்அப் எண்ணுக்கு ரூ.5 கோடி கேட்டு விடுக்கப்பட்ட மிரட்டல் தொடர்பாக ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த காய்கறி விற்பனையாளர் ஷேக் ஹுசைன் ஷேக் மவுசின் (24) என்பவர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல் சல்மான் கான் மற்றும் பாபா சித்திக்கின் மகன் ஜீஷன் சித்திக் ஆகியோருக்கு ரூ.10 கோடி கேட்டு மிரட்டல் விடுத்தது தொடர்பாக உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் தயீப் அன்சாரி (வயது20) என்பவரைப் போலீசார் கைது செய்தனர். அவர் தாதா லாரன்ஸ் பிஷ்னோய் பெயரில் மிரட்டல் விடுத்ததை ஒப்புக்கொண்டார்.
இந்த நிலையில் சல்மான் கானுக்கு மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மும்பை போக்குவரத்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் அனுப்பிய தகவலில், நடிகர் சல்மான்கான் ரூ.2 கோடி தராவிட்டால் அவரைக் கொன்றுவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தார். அந்த மர்ம நபர்மீது மிரட்டிப் பணம் பறித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. மிரட்டல் எங்கிருந்து வந்தது என்பது தொடர்பாகப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
