
சென்னை: சென்னையில் முன்னாள் ரவுடியை, மனைவி மற்றும் குழந்தை கண் முன் கொடூரமாகக் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கும்பலுக்குக் காவல்துறையினர் வலைவீச்சு…
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவைச் சேர்ந்தவர் 27 வயதாகும் கௌதம், இவர் தனது மனைவி பிரியா மற்றும் இரு குழந்தைகளுடன் வசித்து வரும் நிலையில், நேற்று இரவு சுமார் 11 மணியளவில் வீட்டில் மனைவி மட்டும் குழந்தைகளுடன் உறங்கிக் கொண்டிருந்த கௌதமை 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று கத்தி போன்ற ஆயுதங்களைக் கொண்டு சரமாரியாக வெட்டிச் சாய்த்து அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து கௌதமனின் மனைவி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சைதாப்பேட்டை காவல் துறையினர் பிரதத்தை கைப்பற்றிப் பிண கூறாய்விற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி மற்றும் குழந்தையின் கண்ணெதிரே நடைபெற்ற இந்தக் கொடூர கொலை சம்பவம் சைதாப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தக் கொலை தொடர்பாகக் காவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட கௌதம் தேனாம்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், இவர்மீது கொலை உட்பட சில வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
மேலும் உயிரிழந்த கௌதமனின் மனைவி பிரியாவின் முதல் கணவரான ராஜ்கிரணுக்கும், கௌதமிற்கும் ஏற்கனவே முன்பகை இருந்ததாகவும், அதன் காரணமாக இந்தக் கொலை ஏற்பட்டு இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
கொலை நடைபெற்ற பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையாகக் கொண்டு கொலையாளிகளை தேடி வருகின்றனர்.



