
பஞ்சாபில் மழை வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்து ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிவாரணத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.
பஞ்சாப், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து, பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
பஞ்சாப் மாநில முதல்-மந்திரி பகவந்த் மான், உடல் நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால், அவர் இந்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனக் கூறப்படுகிறது.
பஞ்சாப் கவர்னர் குலாப் சந்த் கட்டாரியா, மாநில விவசாயத்துறை மந்திரி குர்மீத் சிங் உள்ளிட்டோர் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
இதில், வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடியிடம் பஞ்சாப் அரசின் தலைமை செயலாளர் சின்ஹா விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்திற்கு ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்.
மேலும், இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவியும் வழங்கப்படும் எனவும் பிரதமர் மோடி அறிவித்தார்.


