கைத்தறி ரகம் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய திட்டம் தொடக்கம் !

ஈரோடு : ஈரோடு மாவட்டம், பவானி அடுத்துள்ள சித்தோடு அரசு பொறியியல் கல்லூரியில் (ஐஆர்டிடி) கல்லூரியில் கைத்தறித்துறையின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகள் இடையே கதர் மற்றும் கைத்தறி ரகங்களை பிரபலப்படுத்தும் திட்ட துவக்க விழா நேற்று நடைபெற்றது.

இவ்விழாவிற்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார். அரசு முதன்மை செயலர் தர்மேந்திர பிரதாப் யாதவ், துணிநூல் துறை ஆணையர் வள்ளலார், கைத்தறி துறை ஆணையர் மற்றும் கோ-ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குநர் விவேகானந்தன், ஈரோடு மேயர் நாகரத்தினம், எம்எல்ஏக்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், வெங்கடாச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் கைத்தறி அமைச்சர் காந்தி ஆகியோர் துவக்கி வைத்து பேசினர். அமைச்சர் காந்தி பேசியதாவது: இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் பெண்களுக்கான இலவச பஸ் வசதி, பெண்களின் உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் அரசு பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மகளிருக்கு மாதம் தலா ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம், பெண்களின் நலனுக்காக கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் என பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகின்றார்.

இதேபோல கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் சார்பில் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வு மேம்பாட்டிற்காக எண்ணற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. கைத்தறி ரகங்களின் உற்பத்தியில் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. கைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு 300 யூனிட் இலவச மின்சாரம், விசைத்தறி நெசவாளர்களுக்கு 2 மாதங்களுக்கு 1000 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம், நெசவாளர் குடும்ப ஓய்வூதிய திட்டம், நெசவாளர் முதியோர் ஓய்வூதிய திட்டம், நெசவாளர்களுக்கான ரூ.4 லட்சம் மதிப்பீட்டிலான மானிய விலையில் வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் இந்தியா முழுவதும் தனது 154 விற்பனை நிலையங்கள் மூலம் கைத்தறி நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் துணி ரகங்களை சந்தைபடுத்தி அதன் மூலம் கைத்தறி நெசவாளர்களுக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு வழங்கி வருகிறது. தற்போது கோஆப் டெக்ஸ் நிறுவனம் ரூ.19.65 கோடி லாபத்தில் இயங்கி வருகின்றன.

மாணவ, மாணவிகள் மற்றும் இளைய தலைமுறையினர் பயன்பெறும் வகையிலும், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கதர் மற்றும் கைத்தறி ரகங்களின் பாரம்பரியம் மற்றும் கலைநயம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் கைத்தறி ரகங்களை பிரபலப்படுத்தும் திட்டம் தமிழ்நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்திலும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நகர்வு பஸ் மூலம் கதர் மற்றும் கைத்தறி ரகங்கள் குறித்து விழிப்புணர்வு மற்றும் பிரபலப்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *